தகுதிகாண் பருவம் முடித்த அரசு ஊழியர்கள் கணினி, கார், பைக் முன்பணம் பெற புதிய அரசாணை மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையைத் தமிழக அரசு எளிமையாக்கியுள்ளது.தமிழக அரசு ஊழியர்களின் நலனில் தமிழக அரசு மீண்டும் ஒரு அதிரடி பரிசை அறிவித்துள்ளது. ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, அவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் கடன்கள் மற்றும் முன்பணம் பெறும் நடைமுறையை எளிமையாக்கி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
2026-2027 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்தபடி, “ஊழியர்களுக்கான நலன் சார்ந்த நிதியுதவிகள் விரைவாகவும் எளிதாகவும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கடன்கள் மற்றும் முன்பணங்கள் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்” என்ற அறிவிப்பின் படி தற்போது அரசு இந்த திருத்தங்களைச் செய்துள்ளது.
அரசின் அதிரடி சலுகைகள் மற்றும் திருத்தப்பட்ட நடைமுறைகளின் விவரங்கள் பின்வருமாறு:
பணிக்கால தகுதி 6 வருடத்தில் இருந்து குறைப்பு!
ஏற்கனவே இருந்த அரசாணை எண்.231 (01.04.1992) மற்றும் 403 (13.08.1998)-ன் படி, கணினி முன்பணம், இருசக்கர வாகன முன்பணம், நான்கு சக்கர வாகன முன்பணம் பெற குறைந்தபட்சம் 6 வருட பணிக்கால தகுதி இருக்க வேண்டும் என்று இருந்தது. இனி 6 வருடம் காத்திருக்க வேண்டியதில்லை. தகுதிகாண் பருவம் (Probation) நிறைவு செய்த அரசு ஊழியர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இது லட்சக்கணக்கான இளம் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.
விண்ணப்பம் சூப்பர் ஈஸி!
முன்பு கணினிக்கு படிவம் 1, 2, 3, 4 மற்றும் வாகனத்துக்கு படிவம் 12, 13, 14 என தனித்தனியாக இருந்தது. இனி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன முன்பணத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே படிவம் – படிவம் எண்.12 மற்றும் கணினி முன்பணத்திற்கு இணைப்பு-1 மட்டும் போதும் என எளிமையாக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க டிஜிட்டல்!
முன்பு கைமுறையாக (Manually) விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இனி, திருத்தப்பட்ட நடைமுறையின்படி IFHRMS மற்றும் Kanaseeyam Sevai மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
பட்ஜெட் முறை மாற்றம் மற்றும் நிதி வழங்கும் அலுவலர்
முன்பு DDO-வுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்து செலவு செய்யப்பட்டது. இனி, தாமதங்கள் குறைக்கப்பட்டு நிதி தடையின்றி வேகமாக கிடைக்கும் பொருட்டு, DTA நிலையில் மையப்படுத்தப்பட்ட பட்ஜெட்டில் (Expenditure incurred based on centralized Budget at DTA level) இருந்து செலவு செய்யப்படும். இதற்கான கண்காணிப்பு அலுவலராக இயக்குநர், கருவூல கணக்குத் துறை செயல்படுவார்.
ஒப்பளிப்பு அதிகாரி
முன்பு துறைத் தலைவர் என்று இருந்த நிலை மாற்றப்பட்டு, இனி பணிபுரியும் அலுவலகத்தின் தலைமை அலுவலர் / பணிப்பதிவேடு பராமரிக்கப்படும் அலுவலகத்தின் தலைமை அலுவலர் தான் ஒப்பளிப்பு அலுவலர் (Sanctioning Authority) என அனுமதிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி முன்பண நடைமுறைகளும் எளிமையாக்கப்படும்
அரசு ஊழியர்களுக்கு சொந்த வீடு வாங்குவது என்பது வாழ்நாள் கனவாகும். எனவே, வீடு வாங்குவதற்கான முன்பணம் பெறுவதற்கான நடைமுறை எளிமையாகவும் மற்றும் வெளிப்படைத்தன்மையுடனும் இனி செயல்படுத்தப்படும். மேலும், ஆவணப் பணிகளுக்கு மூன்றாம் தரப்பு முகவாண்மை (Third Party Agency) சேவைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு குறித்தும் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்திய நடைமுறைகள் அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து பெறப்படும் புதிய விண்ணப்பங்களுக்குப் பொருந்தும். இது தொடர்பாக தமிழ்நாடு நிதிவிதித் தொகுப்பில் தேவையான திருத்தங்கள் தனியே வெளியிடப்படும். தமிழக அரசின் இந்த அதிரடி உத்தரவுக்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.





