SIR பணிகளால் அரசு ஊழியர்களுக்கு கடுமையான பணி நெருக்கடி, மன உளைச்சல், ஏற்படுகிறது. இதன் காரணமாக நாளை SIR தொடர்பான அனைத்து பணிகளும் புறக்கணிப்பட உள்ளதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கம், நாளை (நவம்பர் 18) தொடங்கும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இந்த போராட்டம், ஊழியர்களின் அதிகபணி மற்றும் பணிச்சுமையை குறித்து கவனம் செலுத்த வலியுறுத்தும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டது.

தலைமைச் செயலாளர் முருகானந்தம்

சங்கத்தின் அறிக்கையின்படி, கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் அனைத்து வருவாய்த் துறை ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர். SIR தொடர்பான ஆய்வு கூட்டங்கள், பணிகள் ஆகியவை நாளை முதல் புறக்கணிக்கப்படும்.

இன்று (நவம்பர் 17) மாலை, மாவட்ட ஆட்சியர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்து, மாவட்ட மற்றும் வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். மேலும், தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் சுமூக சூழலை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 4 முதல் தொடங்கிய SIR பணிகள், வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்ய உதவுவதற்காக இருந்தாலும், வருவாய்த் துறை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.

சங்கத்தின் முக்கிய கோரிக்கை:

கூடுதல் பணிப்பளுவுக்கு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும். SIR பணிகள், இறந்தோர், இடம்பெயர்ந்தோர், தவறான விவரங்களை அகற்றுவதை உள்ளடக்கியது. டிசம்பர் 9 அன்று டிராஃப்ட் பட்டியல் வெளியிடப்படும், ஆனால் ஊழியர்களின் வழக்கமான பணியுடன் இணைக்கப்பட்டதால் பணி நெருக்கடி அதிகரித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த போராட்டம், தேர்தல் ஆணையத்தின் SIR பணிகளை பாதிக்கலாம். வருவாய்த் துறை ஊழியர்கள் இல்லாமல் வாக்காளர் பட்டியல் திருத்தம் தாமதமாகும் அபாயம் உள்ளது. சங்கம் அரசு உடனடியாக கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

தேர்தல் ஆணையத்தின் SIR பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை (நவ.18) அடையாள வேலைநிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் நாளை (நவம்பர் 18) பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். மருத்துவ விடுப்பைத் தவிர்த்து வேறு எதற்காகவும் விடுப்பு எடுக்கக்கூடாது என அவர் அறிவுறுத்தி உள்ளார்.