திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் மதுரை,தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார். இதுதவிர வடமாநில தொழிலாளர்கள் பலரும் பணியாற்றுகிறார்கள்.

இந்த தீபாவளி பண்டிகைக்கு பல வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர். அவர்கள் திரும்ப வர ஒரு வாரம் ஆகும் என்பதால், திருப்பூர் பனியன் நிறுவனங்கள் 9 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளன. இந்தியாவின் பின்னலாடை தலைநகரம் என்று போற்றப்படுகிறது திருப்பூர். அஸ்ஸாமின் கடைக்கோடி மக்களுக்கும் சரி, கன்னியாகுமரி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள குலசேகரம் வரை உள்ள மக்களுக்கும் சரி திருப்பூரை நன்றாகவே தெரியும். இந்தியாவில் எங்கே வசிப்பவர்களும், எந்த தொழிலும் தெரியாது என்றாலும், ஏன் யாரையுமே தெரியாது என்றாலும், வீடு, ரூம், அடிப்படை வசதி வாய்ப்புகளுக்கு கையில் பணமே இல்லை என்றாலும் கூட, திருப்பூர் வந்தால் பிழைக்கலாம் என்பது நம்பிக்கை..

பனியன் கம்பெனி

சென்னையிலோ, பெங்களூரிலோ இப்படி ஒருவர் வந்து உடனே வேலை, ரூம் என்று சேர்ந்துவிட முடியாது. ஏன் திருப்பூரின் பக்கத்து ஊரான கோவையில் கூட உடனே வேலையில் சேர்ந்து , எளிதாக அறை எடுத்து தங்கி வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது. ஏனெனில் கோவை, பெங்களூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் அடிப்படை வேலைகளில் சேர முடிந்தாலும், அவர்களுக்கு தனித்திறமை இருந்தால் தான் வேலையில் சேரவே முடியும். அதேபோல் நட்பு வட்டம், உறவினர்கள் இருந்தால் தான் வேலை தேடி வந்து ஜெயிக்கக்கூட முடியும்.

ஆனால் திருப்பூர் அப்படி இல்லை. கடன் தொல்லையால் கலங்கி போய் ஓடி வந்தவர்கள் முதல், வாழ்க்கையே வேண்டாம் என்று ஓடிவந்தவர்கள் வரை.. எந்த வேலையும் தெரியாமல், மொழி தெரியாமல் வந்த பலரையும் வாழ வைத்துள்ளது. வாழ வைத்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் இயங்குகின்றன. இதில், 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் பலர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் பிற வட மாநிலங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம் ஆகும். மேலும் தீபாவளி போனஸ் இன்று அனைத்து நிறுவனங்களிலும் வழங்கப்பட்டு விடுமுறை அறிவிக்கப்படும்.

அதன்படி, சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் திரும்பி வர தாமதமாகும் என்பதால், பனியன் நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து 9 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். இதனால் நாளை முதல் 26 ஆம் தேதி வரை திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் அதிக பணி உள்ள சில நிறுவனங்கள் மட்டும் புதன்கிழமை இயங்கும் என்று அறிவித்துள்ளன. நாளை சனிக்கிழமை என்கிற நிலையில், பல நிறுவனங்கள் சம்பளத்தையும், போனஸையும் நாளை தர வாய்ப்பு அதிகம். பல நிறுவனங்கள் ஏற்கனவே கொடுத்துவிட்டன.

எனவே நாளை முதல் சிறப்பு பேருந்துகள், ரயில்களில் சொந்த ஊர் செல்ல திருப்பூர் மக்கள் ஆயத்தமாகிவிட்டனர்.