யார் இந்த நிமிஷா பிரியா?
2011-ஆம் ஆண்டு கேரளாவின் பாலக்காட்டில் இருந்து ஏமன் தலைநகர் சனாவுக்கு குடும்பத்துடன் செல்கிறார் செவிலியர் சனா. 2014 வரை அங்கே குடும்பத்துடன் இருந்த நிலையில், நிதி நெருக்கடிகளால் கணவர், மகளை தாயகத்துக்கு அனுப்பிவிட்டு அவர் மட்டும் அங்கேயே பணியைத் தொடர்கிறார். இந்தச் சூழலில் ஏமனில் உள்நாட்டுக் கலவரம் வலுக்க, நிமிஷா பிரியாவுக்கு தாயகம் திரும்புவது கடினமாகிறது. ஆனாலும், பிழைத்தாக வேண்டுமே. வழிகளை, வாய்ப்புகளைத் தேடுகிறார். அப்போது தான் அவர் அங்கு ஏமனைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியை சந்திக்கிறார். அவருடன் சேர்ந்து அங்கு ஒரு கிளினிக் திறக்க திட்டமிடுகிறார். ஏமனில் வெளிநாட்டவர்கள் இவ்வாறாக கிளினிக் தொடங்க வேண்டுமானால், சட்டப்படி அந்நாட்டவருடன் இணைந்தே அதை செய்ய இயலும். அதனால், தலால் அப்தோ மஹ்தியுடன் கூட்டாக நிமிஷா கிளினிக் ஆரம்பிக்கிறார்.

கூடவே, அவருக்கான சிக்கல்களும் ஆரம்பித்துள்ளன. நிமிஷாவின் ஆவணங்களைப் பெற்ற மஹ்தி, தான் அவரைத் திருமணம் செய்து கொண்டது போல் தகவல்களை மாற்றுகிறார். அதுமட்டுமல்லாது நிமிஷாவை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார். நிமிஷா பிரியாவின் கூற்றுப்படி, அவருடைய பாஸ்போர்ட்டையும் மஹ்தி கைப்பற்றிக் கொள்கிறார். கிளினிக்கில் இருந்து கிடைக்கும் வருமானத்தையும் சுரண்டிக் கொள்கிறார். இத்தனையையும் எளிதாக சாதிக்க நிமிஷாவை போதை வஸ்துகளைக் கொடுத்து அடிமையாக்கிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் நிமிஷா உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். ஆனால், மஹ்தி மீது நடவடிக்கை எடுக்காமல் நிமிஷாவை போலீஸார் கைது செய்கின்றனர்.

இப்படி போராட்டங்களுடன் நகர்ந்த நிமிஷாவின் வாழ்வில் 2017-ல் பெரிய துயரம் நேர்கிறது. எப்படியாவது மஹ்தியிடமிருந்து பாஸ்போர்ட்டைப் பெற வேண்டும், கொடூரச் சூழலில் இருந்து தப்பிக்க வேண்டும் என முடிவு செய்கிறார். சிறைச்சாலை வார்டன் ஒருவரின் உதவியை நாடுகிறார். அவர் சொல்லியபடி மஹ்தியை மயக்கமடையச் செய்துவிட்டு பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு தப்ப வேண்டும் என்பதே நிமிஷாவின் திட்டம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் கொடுத்த மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆகிவிடவே மஹ்தி இறந்துவிடுகிறார். தொடர்ந்து நிமிஷா கைது செய்யப்படுகிறார். அதன் பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டு அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. கொலைக் குற்றத்துக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.
ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்ததாக, மரண தண்டனையை எதிர்நோக்கி ஏமனின் சனா நகரின் மத்திய சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார் கேரள செவிலியர் நிமிஷா பிரியா.ஏமன் நாட்டில் இஸ்லாம் மதத்தின் ஷரியா சட்டம் அமலில் உள்ள நிலையில், ‘ப்ளட் மணி’ எனப்படும் பணத்திற்கு ஈடாக மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்படலாம் என்ற நம்பிக்கையில் நிமிஷாவும் அவரது குடும்பத்தினரும் இருந்தனர்.இதற்காக நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று 2024 ஏப்ரல் மாதம் ஏமன் சென்றார்.ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதாக நிமிஷாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.நிமிஷா பிரியா குடும்பத்தின் சார்பாக, ஏமனில் இந்த வழக்கைக் கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம் பிபிசி தமிழிடம் இதைக் கூறினார். ஆனால், இதை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரியும், சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோமும் காணொளி நேர்காணல் மூலமாக பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்திடம் உரையாடினார்கள்.

நிமிஷா பிரியாவுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் உள்ளிட்டோர் தலையிட்டுப் பேசியதாலேயே மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தண்டனை குறித்த அறிவிப்பு நிமிஷாவுக்கு சொல்லப்பட்டதா?
கேள்வி: ஜூலை 16-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்பதை நிமிஷாவுக்கு தெரியப்படுத்திவிட்டார்களா?
இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், “எனக்கு ஜூலை 7ஆம் தேதி, மரண தண்டனைக்கான தேதியை உறுதி செய்துவிட்டோம் என சனா மத்திய சிறையின் தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம் செய்தி கிடைத்தது. என்னிடம் சொல்வதற்கு முன்பே, நிமிஷாவுக்கும் இந்தச் செய்தியை தெரியப்படுத்திவிட்டோம் என்றே சிறை நிர்வாகம் கூறியது. நான் அப்போது தனிப்பட்ட வேலைக்காக இந்தியா வந்திருந்தேன். செய்தி கேட்டவுடன் உடனடியாக ஏமனுக்கு புறப்பட்டு வந்தேன்” என்கிறார்.மரண தண்டனை குறித்த அறிவிப்பு வெளியானவுடன், ஏமனின் சனா நகரின் சிறையில் இருந்து சிறைத்துறை நிர்வாகம் மூலமாக நிமிஷா தனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதாக, நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி கூறினார்.ஆனால், அதில் சமீபத்திய அறிவிப்பு குறித்து அவள் ஏதும் சொல்லவில்லை. நான் நலமோடு இருக்கிறேனா என்று மட்டுமே கேட்டிருந்தாள். நான் கவலைப்படக் கூடாது என்பதற்காக அவள் அதை சொல்லவில்லை. சாமுவேல் ஜெரோம் கூறிய பின்பே எனக்கு விவரம் தெரிந்தது.” என்கிறார் பிரேமா குமாரி.கடந்தாண்டு ஏமன் சென்ற பிரேமா குமாரி, நிமிஷாவை இரண்டு முறை சிறையில் சந்தித்துள்ளார்.

கேள்வி: சிறையில் முதல்முறை நிமிஷாவைப் பார்க்கும்போது என்ன பேசினீர்கள்? அந்த உணர்வு எப்படி இருந்தது?
இதற்குப் பதிலளித்த பிரேமா குமாரி, “நான் 12 ஆண்டுகள் கழித்துதான் நிமிஷாவை பார்த்தேன். முதல்முறை கடந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி பார்த்தேன். ஏப்ரல் 23, தூதரக அதிகாரிகளும் நானும் பார்க்கச் சென்றோம். ஆனால், அவளை பார்க்க முடியாதோ என்று கவலைக்கு உள்ளானேன்.அதன் பிறகு அவளை பார்க்கும் போது அவளுடன் இரண்டு பேர் வந்தனர். ஒரே மாதிரி ஆடை அணிந்திருந்தனர். அவள் என்னை ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுதாள். நானும் அழுதேன். உடன் இருந்தவர்கள் அழாதீர்கள் என்று சொன்னார்கள். 12 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக அவளை பார்த்தேன். நான் இறந்தால்கூட அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது. தான் சந்தோஷமாக இருப்பது போல நிமிஷா என் முன் நடித்தாள்.” என்று கூறினார்.
கேள்வி: கேரளாவில் உள்ள நிமிஷாவின் கணவர் டோமி மற்றும் நிமிஷாவின் மகளுடன் இந்த தண்டனை அறிவிப்பு குறித்து பேசினீர்களா?
“டோமியுடன் பேசினேன், அப்போது என் பேத்தியும் பேசினாள். எப்போது பேசினாலுமே அம்மாவை கூப்பிட்டுதானே வருவீர்கள் என்று என்னிடம் பேத்தி கேட்பாள்.அம்மாவை சிக்கீரம் கூப்பிட்டு வரவேண்டும், அம்மாவை பார்க்க ஆசையாக உள்ளது என்று சொன்னாள். நிமிஷாவிடம் பேசும் போதும் இதை சொன்னேன். ‘அம்மாவை கூப்பிட்டு வருவேன் என்று சொன்னேன், அவர்கள் முன்பு நான் எப்படி போய் நிற்பேன். என்னால் திரும்பி போக முடியாது’ என்று நிமிஷாவிடம் சொன்னேன்.” என்று கூறினார் பிரேமா குமாரி.

கேள்வி: இந்த வழக்கில், இந்திய அரசின் தூதரக உதவிகள் ஏதும் கிடைத்ததா?
இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், “இந்த வழக்கில் தொடக்கம் முதலே இந்திய தூதரகம் உதவி வருகிறது. 2017இல் இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டபோது, உள்நாட்டுப் போர் காரணமாக ஏமனில் இருந்த இந்திய தூதரகம் செயல்படவில்லை.அப்போது ஏமனைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் தான் எனக்கு தொலைபேசியில் அழைத்து, இந்த விஷயத்தில் நீங்கள் இந்திய அரசை அணுகவில்லை என்றால், நிமிஷாவுக்கு நியாயமான நீதிமன்ற விசாரணை நடைபெறாது என்று கூறினார். நான் அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங்கை தொடர்பு கொண்டு உதவி கேட்டேன்.உடனடியாக என்னுடன் தொலைபேசியில் அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் உள்ள இந்திய தூதரக முகாம் மூலமாக ஒரு கடிதத்தை (Note Verbale) ஏமனுக்கு அனுப்பிவைத்தார். அதைக் கொண்டுபோய் ஹூத்திகளின் வெளியுறவு அமைச்சகத்திடம் கொடுத்தோம். அதன் பிறகே அல்-பைதா எனும் பகுதியிலிருந்து சனா நகரத்திற்கு நிமிஷா கொண்டுவரப்பட்டார். முறையான விசாரணைகள் நடைபெற்றது.” என்றார்.”வி.கே.சிங் அனுப்பிய அந்தக் கடிதம் தான் நிமிஷா இன்றுவரை உயிரோடு இருப்பதற்கு காரணம்” என்று கூறினார் சாமுவேல் ஜெரோம்.
தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தின் பங்கு
கேள்வி: மஹ்தியின் குடும்பம் நிமிஷாவுக்கு மன்னிப்பு அளிக்க மறுத்துவிட்டார்களா?
இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், “அவர்கள் இதுவரை நிமிஷாவை மன்னிப்பதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை, சம்மதமும் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.
நிமிஷா பிரியாவின் குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது என்று கொல்லப்பட்ட மஹ்தி சகோதரர் அப்தெல்ஃபத்தா மஹ்தி கூறியுள்ளார்.நிமிஷா பிரியா செய்தது குற்றம் என்றும் அவரது குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது என்றும் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், ஊடகங்கள் இந்த விஷயத்தில் குற்றவாளியை ஒரு பாதிக்கப்பட்டவர் போலச் சித்தரிப்பதாகவும் அப்தெல்ஃபத்தா கூறினார்.
கேள்வி: தொடக்கம் முதல் நீதிமன்ற விசாரணைகள் வரை, இந்த வழக்கில் மஹ்தி குடும்பத்தின் பங்கு என்ன?
சாமுவேல் ஜெரோம், “மஹ்தியின் கொலை நடந்தது ஏமனின் வடக்குப் பகுதியில், ஆனால் நிமிஷா கைது செய்யப்பட்டது ஏமனின் மாரிப் எனும் பகுதியில். மாரிப் நகரின் சிறையில் இருந்த நிமிஷாவை, மீண்டும் சட்டபூர்வமாக வடக்கு ஏமனுக்கு அழைத்து வந்ததே மஹ்தியின் குடும்பம் தான். தங்கள் சொந்த வாகனத்தில் சென்று அவர்கள் அல்-பைதாவுக்கு அழைத்து வந்தனர். தெற்கு ஏமனில் நிமிஷா இருந்திருந்தால், அவருக்கு சட்டரீதியான விசாரணை நடந்திருக்காது. எனவே நிமிஷாவுக்கு நீதி விசாரணை நடந்ததற்கு மஹ்தியின் குடும்பமும் ஒரு காரணம். ஆனால் அவர்கள் நிமிஷாவை அழைத்து வந்தது வேறு நோக்கத்திற்காக.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மஹ்தியின் குடும்பத்தினர் ‘ஒசாப்’ எனும் பழங்குடி குழுவை சேர்ந்தவர்கள். அவர்களின் பூர்வீகம் சனாவுக்கு அருகில் தமார் என்ற பகுதி. ஆனால் அவர்கள் வணிகம் செய்து, வாழ்வது அல்-பைதா பகுதியில். திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் வேலைக்காக வசிப்பது போல. ஸ்வாதியா எனும் பழங்குடி குழுவின் பூர்வீகம் தான் அல்-பைதா.அப்படியிருக்க அங்கு வைத்து மஹ்தி கொலை செய்யப்பட, அதற்கான பழி ஸ்வாதியா பழங்குடி மீது விழும் அபாயம் உருவானது. ஏனென்றால், ஏமனில் தங்கள் எல்லையில் வாழும் வேறொரு பழங்குடி நபர் உயிரிழந்தால், அதற்கு பூர்வீக பழங்குடி இனமே பொறுப்பு. நிமிஷா தான் குற்றவாளி என்பது அப்போது தெரியாது. இரு பழங்குடி குழுக்கள் இடையே சண்டை உருவாகும் சூழல் இருந்தது.
பிறகு மஹ்தியின் குடும்பத்திற்கு உண்மை தெரிந்தவுடன், அவர்கள் தங்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு மாரிப் நகரம் சென்று நிமிஷாவை அழைத்து வந்தார்கள். காரணம், நிமிஷாவை சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்றால், இரு பழங்குடி குழுக்கள் இடையிலான பகை தொடர்ந்திருக்கும்.””அதேசமயம், அப்போது அவர்களுக்கு இருந்த கோபத்திற்கு, நிமிஷாவை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் நிமிஷாவை பத்திரமாக அல்-பைதாவிற்கு அழைத்து வந்தார்கள்.
அதன் பிறகு, நிமிஷாவை சனாவிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஹூத்தி வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பு வந்ததும். அதை மதித்து சனாவிற்கு அழைத்து வந்தார்கள்” என்றார்.

கேள்வி: ஏமன் நீதிமன்றங்களால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிமிஷாவை மீட்க முயற்சிப்பதற்கான காரணம் என்ன?
“நிமிஷா குற்றம் செய்துள்ளார். அவருக்கான தண்டனையும் கொடுக்கப்பட்டுவிட்டது. நாங்கள் இப்போது ஷரியா சட்டத்தில் மன்னிப்பு என்ற வழி உள்ளதால் தான் நிமிஷாவைக் காப்பாற்ற முயற்சிக்கிறோம். ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் பதிலல்ல.நிமிஷாவுக்கு ஒரு மகள் உள்ளார், அவரது தாயார் இந்த வயதில் ஏமன் வந்து கஷ்டப்படுகிறார். மஹ்தியின் தரப்பு நியாயத்தைப் புரிந்து கொள்ளும் நாம், இவர்கள் தரப்பையும் பார்க்க வேண்டும். அதேசமயம், மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு அளித்தால் மட்டுமே நிமிஷாவை மீட்க முடியும். இல்லையென்றால் அவரது தண்டனை நிறைவேற்றப்படும்” என்றார் சாமுவேல் ஜெரோம்.
ஏமன் மக்கள் மற்றும் ஊடகங்களின் பார்வை

கேள்வி: ஏமன் மக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த வழக்கை எவ்வாறு பார்க்கிறார்கள்?
இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், “தங்கள் நாட்டு குடிமகனை கொன்றுவிட்டார் என்ற கோபத்தில் தான் ஏமன் பொதுமக்களும், ஊடகங்களும் நிமிஷாவைப் பார்க்கின்றன. அதே சமயம், நிமிஷாவைப் பற்றி நன்கு அறிந்த சிலர் அவர் காப்பாற்றப்பட வேண்டுமென நினைக்கிறார்கள்” என்றார்.
கேள்வி: நிமிஷாவின் தண்டனையை ஒத்திவைக்க வழியுள்ளதா?
“தெரியவில்லை, இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசி வருகிறேன். எங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்து பாப்போம்” என்கிறார் சாமுவேல் ஜெரோம்.
இந்திய அரசின் தூதரக நடவடிக்கைகள்
நிமிஷா பிரியாவை, தூதரக நடவடிக்கை மூலம் இந்திய அரசு மீட்க உத்தரவிடக் கோரி, ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ என்ற தன்னார்வலர் குழு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 10ஆம் தேதி மனு தாக்கல் செய்தது.இந்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், ஜூலை 14-ஆம் தேதி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்தது.அதே நேரம், ஜூலை 16ஆம் தேதி நிமிஷாவுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியிருப்பதால், வழக்கின் தன்மை மற்றும் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, மனுவின் நகலை இந்திய அட்டர்னி ஜெனரலிடம் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.இந்த வழக்கில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால், அது குறித்து இந்திய அட்டர்னி ஜெனரல் மூலம் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு மத்திய அரசை நீதிபதிகள் கோரினர்.
நிமிஷாவின் முன் தூக்குக்கயிறு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.