முதல்வர் ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு பழநியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திண்டுக்கல் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் அதேபோல, பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையிலும் பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

திராவிட முன்னேற்ற கழகம் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. ஆட்சியமைத்த சில மாதங்களிலேயே பழநியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வாய்ப்பு உள்ளது என திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் கூறிவந்தனர். இதோ இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது.. இதோ நாளை அறிவிப்பு வெளியாக உள்ளது என அரசல் புரசலாக கூறிவந்தனர்.

உடுமலை மக்கள் பேரவை அமைப்பினர் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.மகேந்திரனை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்

இந்நிலையில், கடந்த 2023 சட்டசபை கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் 8 புதிய மாவட்டங்கள் உருவாகும் என வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்திருந்தார். மேலும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும் ஒட்டன்சத்திரம் தொகுதி எம்எல்ஏவுமான அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரம், பழநி; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், உடுமலை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை பிரித்து, பழநியை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார்.

உடுமலை மக்கள் பேரவை அமைப்பினர் உடுமலைசட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராதாகிருஷ்னணை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்

இந்நிலையில் நேற்று (மார்ச்-07) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கடிதம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் ஒட்டன்சத்திரம், பழநி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி பழநி மாவட்டம் உருவாக்க அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதோடு, தமிழக சட்டமன்ற பேரவைக்கூட்டத்தில் அரசு மூலம் அறிக்கை சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டியுள்ளதால் 07.02.2025க்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் கடிதம்

கொங்குப்பகுதிகளான உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளை அதிமுக தன்வசம் வைத்துள்ளது. கொங்குப்பகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்குவங்கி உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கொங்குப்பகுதிகளை உடைத்து வாக்குகளை சிதறடிப்பதுதான் திமுகவின் நோக்கமாக உள்ளது. அமராவதி அணை, திருமூர்த்திமலை அணை நீரை தென்மாவட்ட பகுதிகளுக்கு கொண்டுசெல்ல பார்க்கிறது திமுக என கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர் அதிமுகவினர். இது தொடர்பாக அதிமுக சார்பில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. பாஜகவும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றது.

மடத்துக்குளம், உடுமலை சட்டமன்ற தொகுதிகளை பழநி மாவட்டத்துடன் இணைக்க வேண்டாம் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் 2009 ஆம் ஆண்டு ஜூலை 15ம் தேதி உதயமானது. மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளை திருப்பூர் மாவட்டத்தில் இணைத்தனர்.  கோவையிலிருந்து திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்பட்டாலும், முன்பிருந்தது போலவே கோவையில் மண்டல அரசு அலுவலகங்கள் உள்ளதால் எவ்வித நிர்வாகச் சிக்கலும் எழவில்லை. கொங்கு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் எவ்வித மாற்றமுமின்றி சகஜ நிலையிலேயே இருந்தது.

பழநி மாவட்டம் உதயமானால் பொள்ளாச்சி மாவட்டம் உருவாக வாய்ப்புகள் குறைவு என்கின்றனர்.

உடுமலை மக்கள் பேரவை அமைப்பினர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்

திருப்பூர் மாவட்டம் 2009ல் உருவாகும் போது, திமுக ஆட்சியில் இருந்தது. எதிர்கட்சியான அதிமுகவும் பெரியளவில் அழுத்தம் கொடுக்கவில்லை. உடுமலை சட்டமன்ற தொகுதியை திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கவேண்டாம் என அப்போதும் எதிர்ப்புக்குரல் எழுந்தன. ஆனால் தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. காரணம் நி்ாவாகத்தில் எவ்வித பெரிய மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை என்பதால்தான். அதோடு மாவட்டம் பிரிந்தாலும், கொங்கு மண்டலத்திலேயே தொடர்வதால் பொதுமக்கள் மனதளவில் பாதிப்படையாமல் இருந்தனர்.

உடுமலை மக்கள் பேரவை அமைப்பினர் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் ஈஸ்வரசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்

திருப்பூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக மடத்துக்குளம் வட்டம் உள்ளது. மடத்துக்குளத்தை சார்ந்தவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றமாகவும், பழநி வட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மதுரை நீதிமன்றமாகவும் உள்ளது. அப்படியெனில், உயர்நீதி மன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யும்போது ஒட்டன்சத்திரம், பழநியையைச் சேர்ந்தவர்கள் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மடத்துக்குளம், உடுமலையைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்திற்கும் செல்லும் நிலை ஏற்படும். இது பொதுமக்களுக்கும், அரசுக்கும் மிகப்பெரிய நிர்வாகச் சிக்கலை ஏற்படுத்தும். அதேபோல, உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளின் அரசு மண்டல அலுவலக மண்டலங்கள் மதுரையாக மாற்றப்படும். உடுமலையின் எல்லைப்பகுதிகளில் வசிப்பவர்கள் அரசு துறை மண்டல அலுவலகத்திற்கு செல்ல அதிக தூரம் செல்லவேண்டிய நிலை ஏற்படும்.

உடுமலை மக்கள் பேரவை அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்

உடுமலைப்பேட்டையை சார்ந்த சில அரசு ஆவணங்கள் கோவையிலிருந்தே இன்னும் திருப்பூர் மாவட்டத்திற்கு முழுமையாக மாற்றப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் வேறு மாவட்டத்துடன் இந்த இரண்டு தொகுதிகளையும் சேர்த்தால் மேலும் குளறுபடிதான் என்கிறார்கள்.

உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை பழநி மாவட்டத்துடன் இணைக்கக் கூடாது உடுமலைப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு உடுமலை மாவட்டம் உருவாக்க வேண்டும் என உடுமலை மக்கள் பேரவை கூட்டமைப்பு, உடுமலைப்பேட்டை வியாபாரிகள் சங்கம்,விவசாய சங்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றியும்,சுவரொட்டிகள் ஒட்டியும், சமூக வலைத்தளங்களில் கண்டத்தை பதிவு செய்து தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்களிடமும் நேரில் சென்று கோரிக்கை வைத்துள்ளனர். பழநி வட்டத்தைச் சேர்ந்த வர்த்தக, தொழில் சங்கங்கள் பழநி மாவட்டம் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தங்கள் ஆதரவைக் காட்டி வருகின்றனர்.

பழநி மாவட்ட உதயம் “இப்படி ஏட்டிக்கு போட்டியாக உள்ளது”