உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடநக்கும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கங்கை நீரில் புனித நீராடி வருகின்றனர். தினமும் பல லட்சம் பேர் புனித நீராடி வரும் நிலையில் கும்பமேளாவின் புனித நீராடல் நடக்கும் கங்கை நீரில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கழிவு அதிகளவில் கலந்துள்ளது. மல பாக்டீரியாக்கள் உள்ளதால் அந்த தண்ணீர் குளிக்க உகந்தது இல்லை என்று மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ‛மகா கும்பமேளா’ நடந்து வருகிறது. மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்றாக இணையும் திரிவேணி சங்கமத்தில் தான் இந்த கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி இந்த கும்பமேளா விழா தொடங்கியது. பிப்ரவரி மாதம் 26ம் தேதி வரை மொத்தம் 45 நாட்கள் இந்த கும்பமேளா நடைபெற உள்ளது. மொத்தம் 40 கோடி பேர் வரை திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். தற்போது வரை 55 கோடிக்கும் அதிகமான மக்கள் கும்பமேளாவில் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வந்து புனித நீராடி செல்கின்றனர். ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், நடிகர், நடிகைகள் என்று பிரபலங்கள் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்

இதற்கிடையே தான் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கங்கை, யமுனை நதியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிரகாஷ் ஸ்ரீவத்சவா, நீதித்துறை உறுப்பினர் நீதிபதி சுதீர் அகர்வால் மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் செந்தில் வேல் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை என்பது கங்கை, யமுனை நதியில் ஓடும் தண்ணீரில் இருக்கும் மாசுபாடு பற்றிய விபரங்களை உள்ளடக்கி இருந்தது. அதன்படி பார்த்தால் தற்போது மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜில் ஓடும் ஆற்று தண்ணீர் மக்கள் குளிக்கும் வகையில் இல்லை. அந்த நீர் மாசுபட்டுள்ளது. மக்கள் குளிப்பதற்கான தரத்தை அந்த தண்ணீர் இழந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தண்ணீர் மக்கள் குளிக்க உகந்ததாக இல்லை. இதற்கு முக்கிய காரணம் தண்ணீரில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து வரும் கிருமிகள் அதிகம் உள்ளன.

பிரயாக்ராஜில் கண்காணிக்கப்பட்டு வரும் இடங்களில் பேக்கல் கோலிஃபார்ம் அல்லது மலக் கோலிஃபார்ம் (faecal coliform) உள்ளதால் தண்ணீர் தரமாக இல்லை. மகாகும்பமேளா புனித நீராடல் மற்றும் சுப நாட்களில் அதிகமான பக்தர்கள் குளிப்பதால் மலக்கிருமிகள் அதிகரித்துள்ளன. தண்ணீரில் மலக் கோலிஃபார்ம் அளவு என்பது 100 மில்லியில் 2,500 யூனிட் என்ற அளவுக்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் இங்கு அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிக்கை தொடர்பாக பதிலளிக்க உத்தர பிரதேச அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கும்பமேளா தண்ணீரில் கலந்துள்ளதாக கூறப்படும் மலக் கோலிஃபார்ம் என்பது ஒருவகையான பாக்டீரியாவாகும். இந்த பாக்டீரியா என்பது சூடான ரத்தம் கொண்ட விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் உயிர் வாழும். இந்த பாக்டீரியா என்பது மனிதன் அல்லது விலங்கு கழிவுகளுடன் தொடர்புடையது.

பொதுவாக இந்த பாக்டீரியாக்கள் தண்ணீரை மாசுபடுத்தும். இந்த பாக்டீரியா கலந்த தண்ணீரில் நாம் குளிக்கும்போது வாய், மூக்கு, காது வழியாக உடலுக்குள் செல்லலாம். இதனால் உடல்நலக் குறைவு ஏற்படும். காய்ச்சல், குமட்டல், வயிற்று போக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது..