கரூரில் புகாரளிக்க வந்த பெண்ணை வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டு, டிபி தெளிவாக இல்லை எனவும் நல்ல போட்டோ அனுப்புமாறும் வரம்பு மீறி இன்ஸ்பெக்டர் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சாதாரண போன் காலில் பேசினால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து வாட்ஸ்-அப்பில் பேசிய இன்ஸ்பெக்டரை சாதுர்யமாக செயல்பட்ட இளம்பெண், இன்ஸ்பெக்டரின் செயலை அம்பலப்படுத்தியுள்ளார். கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளம் பெண் ஒருவரிடம் காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் வரம்பு மீறி பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகாரளிக்க வந்த பெண்ணை வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டு பேசும் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், வாட்ஸ் அப் டிபி தெளிவாக இல்லை எனவும் தெளிவாக தெரியும்படி வைக்கலாமே எனக் கூறுகிறார். அதற்கு அந்த பெண் தெரியாத மாதிரி இருக்க வேண்டும் என்றுதான் அப்படி வைத்துள்ளேன் என சொல்லி சமாளிக்கிறார். அப்போதும் விடாத இன்ஸ்பெக்டர்.. அப்படி என்றாலும் பரவாயில்லை எனக்கு போட்டோ மட்டும் அனுப்புங்கள் என சொல்கிறார். மறக்காம அனுப்புங்க என்றும் இன்ஸ்பெக்டர் கூறுகிறார்.

காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியன்

சாதாரண காலில் பேசினால்தான் ரெக்கார்டு செய்து மாட்டி விடுகிறார்கள். வாட்ஸ் அப் காலில் பேசினால் ரெக்கார்டு செய்ய முடியாது எனக் கருதி, இன்ஸ்பெக்டர் பெண்ணிடம் வரம்பு மீறி பேச, இளம்பெண்ணோ மிகவும் சாதுர்யமாக வாட்ஸ் அப் அழைப்பை ஸ்பீக்கரில் போட்டு விட்டு இன்னொரு போன் மூலமாக வீடியோ ரெக்கார்டு செய்து இருக்கிறார். இதனால், இன்ஸ்பெக்டரின் குட்டு அம்பலம் ஆகியுள்ளது. இன்ஸ்பெக்டர் இளம்பெண்ணிடம் வரம்பு மீறி பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட திருச்சி சரக டிஐஜி வருண்குமார், இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். வாட்ஸ் அப் காலில் வந்து பேசி தொல்லை செய்த இன்ஸ்பெக்டரை சாதுர்யமாக செயல்பட்டு அம்பலப்படுத்திய இளம்பெண்ணின் செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பாதிக்கபட்ட பெண்கள், பொதுமக்கள் புகார் கொடுக்க வரும் போது அவர்களிடம் கனிவாக பேசி, புகார்களை பெற்று, உரிய நடவடிக்கையை தமிழக போலீசார் எடுக்கிறார்கள். ஆனாலும் ஒரு சில போலீசார் சபல புத்தியுடன் நடந்து கொண்டு இப்படி நடந்து கொள்வது காவல்துறையினருக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுகிறது. அதிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் செல்போனை எண்ணை குறித்து வைத்துக்கொண்டு அவர்களிடம் ஒரு சில போலீசார் வரம்பு மீறி பேசுவது பொதுமக்களுக்கும் அச்சம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட போலீசார் மீது எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் வரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் முற்றிலுமாக தடுக்கப்படும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.

வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி?