கொலை செய்யப்பட்ட மினிபஸ் டிரைவர், தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று முன்கூட்டியே போலீசில் புகார் தந்திருக்கிறார். ஆனால், புகார் தந்தும்கூட, இன்ஸ்பெக்டர் ரவிமதி அதுகுறித்து முறையாக நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து, இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் உத்தரவிட்டிருக்கிறார்.
என்ன நடந்தது தஞ்சையில்? தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே உள்ள பசுபதிகோவில் புள்ளமங்கை மணல்மேடு தெருவைச் சேர்ந்தவர் சிவமணிகண்டன். மினி பஸ்ஸில் டிரைவராக பணியாற்றுபவர்.. சிவமணிகண்டனுக்கு 28 வயதாகிறது. கடந்த 6ம்தேதி தன்னுடைய மினி பஸ்சிற்கு டீசல் நிரப்புவதற்காக, பங்க் அருகில் சென்றபோது கஞ்சா போதையில் இருந்த சிலர் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள்.. எனவே இதுபற்றி அய்யம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ரவிமதியிடம் இந்த புகாரை சிவமணிகண்டன் தந்திருக்கிறார்.
இந்நிலையில், மறுநாள் அதாவது 7ம் தேதி மாலை, அய்யம்பேட்டை பஸ் ஸ்டாண்டு அருகே, சிவமணிகண்டனை 3 பேர் நடுரோட்டில் பொதுமக்கள் கண்முன்னாடியே வெட்டி கொன்றனர். இது அய்யம்பேட்டையில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டு பண்ணியது. இதையடுத்து, சிறுவன் உள்பட 4 பேரை இந்த வழக்கு தொடர்பாக அதிரடியாக கைது செய்தனர். இதற்கு நடுவில், சுந்தரேசன், ராகுல், பரமேஸ்வரன் ஆகிய 3 பேரையும், ஜெயங்கொண்டம் கோர்ட்டில் சரணடைந்து விட்டனர். சிவமணிகண்டன் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சுந்தரேசன் கருதப்படுகிறார்.. ஏனென்றால், சிவமணிகண்டன் வசித்த பகுதியில்தான், சுந்தரேசன் தரப்பினர், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கிருக்கிறார்கள். இந்த வீட்டுக்கு சந்தேகப்படும் வகையில் நிறைய பேர் வந்து சென்றுள்ளனர்…
மேலும் கஞ்சா மூட்டைகளை இறக்குவது, எடுப்பதுமாக இருந்து வந்தது சிவமணிகண்டன் தரப்புக்கு தெரியவந்துள்ளது. இந்த வீட்டில் என்ன செய்கிறீர்கள்? என்று சிவமணிகண்டன் தரப்பு கேட்டபோது, சுந்தரசேன் தரப்பினர் பட்டாக்கத்தியுடன் வந்து மிரட்டியதாக தெரிகிறது. பட்டாக்கத்தியுடன் இருந்தவரை, சிவமணிகண்டன் தரப்பு, போலீஸில் பிடித்து கொடுத்தும், அந்த நபர் மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதற்கு பிறகுதான், கடந்த 6-ம் தேதி இரவு பெட்ரோல் பங்கில் சிவமணிகண்டனை அந்த கும்பல் தாக்க சென்றுள்ளது. உடனே அன்றைய தினம் இரவே சிவமணிகண்டன், தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது, என்னை கொலை செய்து விடுவார்கள் நடவடிக்கை எடுங்கள் என்று புகார் தந்துள்ளார்.. அந்த புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ரவிமதி உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்கவில்லையாம்.. அலட்சியமாக இருந்துவிட்டாராம். கொந்தளிப்பு: அப்படி இன்ஸ்பெக்டர் முறையாக விசாரித்திருந்தால், இந்த கொலை நடந்திருக்காது என்றும் மறுநாளே சிவமணிகண்டனை அநியாயமாக வெட்டி கொன்றுவிட்டார்களே” என்றும் சிவமணிகண்டன் தரப்பினர் கொந்தளித்துள்ளனர். இதையடுத்து, முதல் நாள் இரவே, புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த காரணத்தால், இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும், குற்ற சம்பவத்தை தடுக்க தவறியதற்காகவும் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிமதியை சஸ்பெண்ட் செய்து தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் உத்தரவிட்டிருக்கிறார்.
பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூரில் காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது. இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் 3 பேர் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்திருந்தனர்.. மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த சிறுவன் உள்பட 4 பேரை அய்யம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிது.