உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற மைக் டைசனை, யூடியூபராக இருந்து குத்துச்சண்டை வீரராக மாறிய ஜேக் பால் வென்றுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸில் AT &T மைதானத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசனை அவர் வீழ்த்தியுள்ளார். இந்த ஆட்டத்தை 70 ஆயிரம் ரசிகர்கள் நேரிலும், லட்சக்கணக்கானோர் நெட்ஃபிளிக்ஸ் மூலம் நேரலையிலும் கண்டு களித்தனர்.
58 வயதான மைக் டைசன் இரண்டு முறை ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்றவர். அவர் 19 வருடங்களாக தொழிற்முறை குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவரை எதிர்த்து களம் கண்ட 27 வயதான ஜேக் பால் குத்துச்சண்டை களத்துக்கு புதியவர். டைசனுடன் ஒப்பிடுகையில் அவர் மிகவும் இளமையாகவும், தடகள வீரரைப் போன்ற உடற்தகுதியுடனும் இருந்தார்.
இரண்டு நிமிட சுற்றுகள் கொண்ட எட்டு-சுற்றுப் போட்டியில் அவர் டைசனை தன் கட்டுக்குள் வைத்திருந்தார். தன் துல்லியமான தாக்குதல்களால் (jabs and accurate punches) டைசனை வீழ்த்தினார்.இந்த போட்டியில் டைசன் மெதுவாகவும் மந்தமாகவும் செயல்பட்டார்.குத்துச்சண்டை போட்டிக் களத்திற்குள் டைசன் நுழையும் போது அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது. மக்கள் அவரை நாயகனாக பாவித்து கோஷங்கள் எழுப்பினர். ஆனால் சண்டை முடிவடையும் போது அங்கு பெரும் கூச்சல்கள் எழுந்தன. விரக்தியின் அலை பரவியது.ஒட்டுமொத்தப் போட்டியில் டைசன் 18 குத்துக்களை மட்டுமே பதிவு செய்தார்.
போட்டியின் நடுவர்கள் 80-72, 79-73 மற்றும் 79-73 என்ற புள்ளிகளை அறிவிப்பதற்கு முன்பே சில ரசிகர்கள் வெளியேறினர்.இந்த போட்டியின் உண்மைத் தன்மை மற்றும் போட்டியாளர்கள் எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டு விளையாடினார்கள் என்பதில் ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் இருந்தன.போட்டிக்குப் பிந்தைய ஒரு சங்கடமான தருணத்தில், டைசன், ஜேக் பாலின் சகோதரர் லோகனை அழைத்து, இதுவரை அவர் விளையாடிய 57 போட்டிகளில் இது தனது ஏழாவது தோல்வி என்றும் இதற்கு பின்னரும் மீண்டும் போட்டியிடுவேன் என்றும் கூறினார்.
டெக்சாஸ் கமிஷன் நிர்ணயித்த நிபந்தனைகளின் ஒரு பகுதியாக இருவரும் கூடுதல் ஸ்பாஞ்ச் நிரப்பப்பட்ட கனமான கையுறைகளை அணிந்திருந்தனர். இது தொழிற்முறை போட்டிக்கான (pro fight) ஒரு அம்சம். ஆனால் போட்டி முடிந்ததும் இந்த கையுறைகள் விவகாரம் கேலிக்குரியதாகத் தோன்றியது.இலகுவான கையுறைகள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தியிருக்காது. இரண்டு வீரர்களும் வீசிய எந்த குத்துகளும் நாக் அவுட் நிலையை நெருங்கவில்லை.பால் ஒட்டுமொத்தப் போட்டியில் 78 குத்துகளை பதிவு செய்தார். ஆனால் டைசன் 18 குத்துகள் மட்டுமே விட்டார்.
பரிசுத் தொகை எவ்வளவு?
இந்த குத்துச்சண்டைப் போட்டியில் வென்ற ஜேக் பாலுக்கு இந்திய மதிப்பில் சுமார் 320 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது. போட்டியில் தோற்றாலும், குத்துச்சண்டை ஜாம்பவானான மைக் டைசனுக்கு சுமார் 160 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) பரிசு கிடைத்தது.இந்தப் போட்டியை நெட்ஃபிளிக்ஸ் மூலம் உலகம் முழுவதும் 28 கோடிக்கும் அதிகமான சந்தாதாரரர்கள் நேரலையில் பார்த்து ரசித்தனர். டிக்கெட் விற்பனை மூலம் சுமார் 150 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. குத்துச்சண்டை வளையத்திற்கு நெருக்கமான இருக்கை, வீரர்களுடன் புகைப்படம் எடுக்க அனுமதி போன்றவற்றுடன் கூடிய வி.ஐ.பி. குரூப் பேக்கேஜ் கட்டணம் சுமார் 17 கோடி ரூபாய் ஆகும்.
டைசனை வென்ற ஜேக் பால் யார்?
பால் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கு முன், ஆன்லைனில் காமெடி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவரை சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.இது ஜேக் பாலின் 11-வது தொழிற்முறை குத்துச்சண்டைப் போட்டி. கடந்த ஆண்டு டாமி ப்யூரியிடம் அவர் தோற்றார். மேலும் மெக்சிகன் சூப்பர் ஸ்டார் சவுல் ‘கனெலோ’ அல்வாரெஸுடன் சண்டையிடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் தெரிவித்தார்.
“அவர் பணம் பெற விரும்புவதை அறிந்ததால், பணம் எங்குள்ளது என்பது அவருக்குத் தெரியும்.” என்று பால் கூறினார்.