அமெரிக்காவில் 50 மாகாணங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. மாகாணங்களுக்கு இடையே நேர வித்தியாசம் உள்ள நிலையில் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் ஒவ்வொரு மாகாணங்களாக வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த முறை ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டு உள்ளார். அதேபோல் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் களமிறக்கப்பட்டு உள்ளார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், 50 மாகாணங்களில் மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளில் 270க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை.. அதாவது எலக்ட்ரல் வாக்குகளை பெறும் வேட்பாளரே அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார். கிட்டத்தட்ட 11 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி 7 கோடி பேர் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் வாக்குகளை எண்ணி வெற்றியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ஜனவரி 6ஆம் தேதி காங்கிரஸ் சபை அமெரிக்காவில் கூடும், புதிய ஜனாதிபதி ஜனவரி 20ம் தேதி பதவியேற்பார்.
தேர்தல் எப்படி நடக்கும்: அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும்.