கோவையில் நடந்த விவாதத்தில் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமனிடம் பேசியது சர்ச்சையானது. திமுகவினர் உள்பட எதிர்க்கட்சியினர் இந்த வீடியோவை அதிகமாக சோசியல் மீடியாவில் பகிர்ந்த நிலையில் திடீரென்று அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்து விளக்கம் அளித்து மன்னிப்பு கோரியதாக வீடியோ பரவி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன்

இவர் அடிக்கடி பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அப்போது தொழில் துறையினர் மத்திய அரசின் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைப்பது வழக்கம். சில நேரங்களில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தொழிலதிபர்கள் கூறும் கருத்து, அதற்கு நிர்மலா சீதாராமன் அளிக்கும் பதில் உள்ளிட்டவை விவாதத்தை கிளப்பும். அந்த வகையில் தான் நேற்று முன்தினம் ஒரு சம்பவம் கோவையில் நடந்தது.

அதாவது கோவை கொடிசியாவில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பேசியது அதிக கவனம் பெற்றது. அவர், ‛‛உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க. பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள்” என கூறினார்.

இவரது இந்த பேச்சு வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதிகமாக பகிர்ந்து நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்தனர். இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். அதில் “ஹோட்டல் உரிமையாளர் தங்களின் பிரச்னையை ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். அதில் தவறில்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. அவர்களின் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை. அவரது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்” என்றார்.

இந்நிலையில் தான் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோருடன் அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன் இருக்கிறார். அப்போது சீனிவாசன், “நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.” என்று எழுந்து நின்று கை கூப்பும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் இந்த வீடியோவில் ஆடியோ என்பது சரியாக கேட்கவில்லை. இதுபற்றி நிர்மலா சீதாராமன், அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. இருப்பினும் அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன் தனது பேச்சுக்கு நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரியதாக அந்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனுக்கு ஆதரவாக கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில் ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளாா்.