இந்தியாவில் தற்காப்பு, விளையாட்டு, பயிர் பாதுகாப்பு ஆகிய காரணங்களுக்காக மட்டுமே துப்பாக்கி உரிமம் வாங்க முடியும். தற்காப்புக்காக உரிமம் பெறும்போது மனிதர்கள் அல்லது விலங்குகளால் ஆபத்து இருப்பதை நிரூபிக்க வேண்டும். தனிப்பட்ட நபருக்கு பாதுகாப்பு தேவைக்காக துப்பாக்கி உரிமம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது  அடையாள சான்று, வருமான வரிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்,  தொழில்ரீதியான விவரங்கள், பாங்க் பேலன்ஸ் ஷீட், ஆடிட் ரிப்போர்ட், சொத்து விவரங்கள், மனநல சான்றிதழ் மற்றும்  விண்ணப்பதாரர்களுக்கு எதிரிகளிடமிருந்து எதுவும் மிரட்டல் இருந்தால் அதுகுறித்த காவல்துறை எஃப்.ஐ.ஆர். நகல் போன்றவற்றை இணைக்க வேண்டும்.

 இந்த ஆவணங்களை சரிபார்த்த பிறகு மாவட்ட அலுவலகத்தின் வாயிலாக பலகட்ட விசாரணைகள் நடைபெறும். அவர்கள், என்ன காரணத்திற்காக துப்பாக்கி வாங்க விரும்புகிறார்கள், எப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்கிற ரீதியில் விவரங்கள் சேகரிக்கப்படும். துப்பாக்கி வாங்க விரும்புபவர்கள் மீது ஏற்கெனவே கிரிமினல், சிவில் புகார்கள் இருந்தால் அவர்களது லைசென்ஸ் மனு கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இதுதவிர விண்ணப்பதாரர் மீது  காவல்துறைக்கு வேறு எந்த வகையில் சந்தேகம் இருந்தாலும், லைசென்ஸ் கொடுப்பதை நிறுத்த அவர்களுக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளன. இதன் அடிப்படையில்தான் துப்பாக்கி வாங்குவதற்கான லைசென்ஸ் வழங்கப்படும்.

 துப்பாக்கி உரிமம் எத்தனை வருடங்களுக்கு செல்லுபடியாகும்?

புதிதாக துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் மூன்று மாதங்களுக்குள் துப்பாக்கி வாங்கிவிட வேண்டும். இந்த லைசென்ஸ் மூன்று வருட காலத்துக்கு செல்லுபடியாகும். அந்தக் காலக்கெடு முடிந்த பிறகு கட்டாயம் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும்போது ஏற்கெனவே துப்பாக்கி உரிமம் இருந்த காலத்தில் விண்ணப்பதாரரின் பேரில் காவல்துறையின் நற்சான்றிதழ் அவசியம் தேவை. உரிமம் பெற்ற காலத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர் மீது காவல்துறைக்கு சந்தேகம் வந்தால், அவர்கள் விசாரணைக்கு எந்த நேரத்திலும் உட்பட வேண்டியிருக்கும். தேர்தல் காலங்களில் காவல்துறையிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட வேண்டும். இதுதவிர, அந்தத் துப்பாக்கி தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும்.

ஒருவர் எத்தனை துப்பாக்கி, தோட்டாக்கள்  வைத்துக் கொள்ளலாம்?

துப்பாக்கி லைசென்ஸ் பெற்ற ஒரு நபர் அதிகபட்சம் மூன்று துப்பாக்கிகளை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். தோட்டாக்கள் எண்ணிக்கை என்கிற விஷயத்தில் ஒரு வருடத்துக்கு 100 தோட்டாக்கள் வரை வாங்க முடியும். துப்பாக்கி வாங்கியவர் வைத்திருக்கும் அல்லது பயன்படுத்தும் ஒவ்வொரு தோட்டாவுக்கும் அவரே பொறுப்பு.ஒரு மாநிலத்தில் உரிமம் பெற்றிருந்தால் அம்மாநிலத்தில் மட்டுமே துப்பாக்கியை வைத்துக்கொள்ளலாம். வேறு மாநிலங்களுக்குப் போகும்போது மறுபடியும், காவல்துறையின் அனுமதி பெறவேண்டும்.

துப்பாக்கியை சரண்டர் செய்வது எப்படி ?

தற்காலிகமாக வெளிநாடு செல்லும் பட்சத்தில் துப்பாக்கியை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டுச் செல்லலாம். நிரந்தரமாக துப்பாக்கியை சரண்டர் செய்ய அதற்கான லைசென்ஸை காவல் நிலையத்தில் சரண்டர் செய்து சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.