திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் மடத்துக்குளம்-கணியூர் நெடுஞ்சாலையை சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். விவசாய நிலங்களுக்கு பல்வேறு இடுபொருட்கள் கொண்டு செல்வதோடு அறுவடை செய்த கரும்பு, காய்கறிகள், தானியங்களை இந்த வழித்தடத்தில் எடுத்துச் சென்று சந்தைப்படுத்தி  வருகின்றனர். இது தவிர இப்பகுதியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளும் உள்ளன. அதற்காக இயக்கப்படும் கனரக வாகனங்களும் அரசு, தனியார் பேருந்துகளும் இந்த சாலையில் அதிகமாக செல்கிறது. மடத்துக்குளத்தில் இருந்து தாராபுரத்திற்கு செல்லும் பிரதான சாலையாகவும் இந்த சாலை உள்ளது.

இவ்வளவு பயன்பாடுள்ள இந்த சாலையில் வேடபட்டி பிரிவு முதல் டாஸ்மாக் மதுபானக் கடை வரை தெருவிளக்குகள் அவ்வளவாக இல்லை என்பதால் இரவு நேரங்களில் கடும் இருட்டாகவே காட்சி தருகிறது. மேலும் செக்கான் ஓடை பாலத்தின் சாலை துவங்கி முடியும் வரை சற்று வலைவாக இருப்பதால், இரவு நேரங்களில் வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இந்த பாலம் உள்ளதை அறியாமல் பலர் பாலத்தின் மீது மோதி விபத்துக்களுக்குள்ளாகி வருவது தொடர்கதையாக வருகிறது. இதனால் பல சமயங்களில் உயிச்சேதமும் ஏற்படுகின்றது.

சேனாதிபதி இதழ் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனு

நேற்று (ஆக-18) செக்கான் ஓடை பாலத்தில் இருசக்கரத்தில் வந்தவர்கள் வாகன விபத்துக்குள்ளாகி பெண் ஒருவர் படுகாயமடைந்தார். அதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். மேலும், இதே செக்கான் ஓடை பகுதியில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் தனியார் பேருந்தும், செங்கல் லோடு ஏற்றி வந்த லாரியும், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் விபத்திற்குள்ளானோர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக “சேனாதிபதி இதழ்” சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுநல மனு அனுப்பப்பட்டது. அதன்மீதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

செக்கான் ஓடை பாலத்தின் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை வந்தபின்னர் தான் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. இதையும் கருத்தில் கொண்டு மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஆக, செக்கான் ஓடைப்பகுதியில் விபத்துகள் நடைபெறுவது இன்றே நேற்றே அல்ல காலங்காலமாக நடைபெற்று வருகிறது. தொடர் விபத்துக்கள் ஏற்பட்டும் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று  நெடுஞ்சாலைத்துறையினர் குறட்டை விட்டு உறங்கிக்கொண்டுள்ளனர். மேற்படி சாலையின் இரு ஓரங்களிலும், பாலங்களிலும் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். பாலத்தை கடக்கும் முன்பும் கடந்த பின்பும் என இரண்டு இடங்களிலும் வேகத்தடை அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே விபத்துகள் தடுக்கப்பட்டு விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பாதுகாக்கப்படும்.

எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாத நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்யவேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.