“தமிழக அமைச்சர் உதயநிதியின் சந்தோஷத்திற்காக, ‘பார்முலா – 4 கார் ரேஸ்’ நடத்தப்படுகிறது. இவ்விவகாரத்தில், பொதுமக்கள் நலன் கருதி, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை தெரிவித்தார்

இன்பதுரை


தமிழக அரசும், ரேஸிங் புரமோஷன் நிறுவனமும் இணைந்து இந்த ஆண்டின் துவக்கத்தில், சென்னை தெருக்களை சுற்றி பார்முலா கார் பந்தயம் நடத்த திட்டமிட்டிருந்தன. ஆனால், ‘மிக்ஜாம்’ புயல் வந்ததைத் தொடர்ந்து, பந்தயம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அதை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக நாளும் குறித்துள்ளனர்.ஏற்கனவே சென்னை தெருக்கள் நெருக்கடியான சூழலில் உள்ளன. அந்த நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டெடுக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், சென்னையின் நெருக்கடியான சாலைகள் வழியே, கார் பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ளனர்

வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட நிலையிலும், கார் பந்தயம் நிகழ்ச்சியை நடத்த அரசு விரும்புகிறது. இது ரோம் நகரம் பற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த நிகழ்வுபோல் உள்ளது.சென்னையில், பார்முலா கார் பந்தயத்தை நடத்தினால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். ஏனெனில் பந்தயம் நடக்கும்போது, பல பெரிய சாலைகள் மூடப்பட வேண்டும். போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும். பந்தயம் நடக்க உள்ள பகுதியில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட அதிமுக்கியமான இடங்கள் உள்ளன.

‘பார்முலா – 4 கார் ரேஸ்

இந்தப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருப்பதோடு, எந்நேரமும் மக்கள் சென்று வருவர். பந்தயத்தில் பங்கேற்கும் கார்கள் செல்லும்போது, 120 டெசிபல் அளவிற்கு மேல் சத்தம் கேட்கும். இது, அந்தப் பகுதியில் இருக்கும் மருத்துவமனை நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.கார் பந்தயம் நடத்துவதற்கென்றே, சென்னையின் புறநகரான இருங்காட்டுக்கோட்டையில் சிறப்பான ஏற்பாடுகளுடன் நிரந்தர கட்டமைப்பு உள்ளது. அங்கு கார் பந்தயம் நடத்தினால், மக்கள் மத்தியில் அதீத முக்கியத்துவமும், நிகழ்ச்சிக்கு தன்னிச்சையான பிரபலமும் கிடைக்காமல் போகும் என்பதால், சென்னையின் முக்கியமான பகுதியில் கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.சென்னையின் மத்திய பகுதியில் கார் பந்தயம் நடத்தினால் கட்டாயம் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொது மக்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.

‘ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனம் வாயிலாக கார் பந்தயம் நடத்த அரசு அனுமதித்துள்ளது. அதற்காக, அரசு பணத்தை எடுத்து 42 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். அதை திரும்பப் பெற வேண்டும் என்று கூறி, ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு உரிய தீர்ப்பைப் பெற்றுள்ளோம். உயர் நீதிமன்றம் கார் பந்தயம் நடத்த பல நிபந்தனைகள் விதித்தது. ஆனால், தனியார் நிறுவனத்தை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வைத்தனர். வழக்கு நிலுவையில் இருக்கிறது. இருந்தபோதும், மீண்டும் கார் பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கொலைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து, பொதுமக்களை தொடர் அச்சத்தில் இருந்து காப்பதை விடுத்து, கார் பந்தயம் நடத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்துவது ஏற்புடையதல்ல.போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கார் பந்தயம் நடத்தி உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டால், அது அரசு செய்த கொலையாகவே கருதப்படும்.எனவே, பொதுமக்கள் நலன் கருதி, அரசு தரப்பில் கவுரவம் பார்க்காமல் சென்னையின் பிரதான பகுதியில் கார் பந்தயம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அரசு பணம் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அமைச்சர் உதயநிதியின் தனிப்பட்ட சந்தோஷத்திற்காக கார் பந்தயம் நடத்தப்படுகிறது.

அதனால் தான், கார் பந்தயத்தை சென்னையின் பிரதான பகுதியில் நடத்தக் கூடாது என, தலைமைச் செயலரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம். உரிய நடவடிக்கை இல்லாவிட்டால், மீண்டும் நீதிமன்ற உதவியை நாடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.