சென்னை: இந்தியன் 2 படத்தை ரசிகர்கள் தியேட்டரில் சென்று பார்க்க முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்தியன் 3 டிரைலர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சோஷியல் மீடியாவில் அதற்குள் இந்தியன் 3 டிரைலரை லீக் செய்து விட்டனர். மொத்த டிரைலரும் லீக்கான நிலையில், கமல்ஹாசன் ரசிகர்கள் அப்செட்டாகி உள்ளனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். எந்திரன் படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ மற்றும் ‘2.0’ படங்கள் விமர்சன ரீதியாக மிகப்பெரிய அடி வாங்கிய நிலையில், இந்தியன் 2 திரைப்படம் அதை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், காலை முதலே படத்துக்கு கலவையான விமர்சனங்களே குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் இனிமேல் தான் படம் எப்படி இருக்கு என்கிற முடிவுக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் 3 டிரைலர் லீக்: இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்தின் டிரைலர் இடம்பெறும் என நேற்று கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று வெளியான இந்தியன் 2 படத்தின் இறுதியில் திரையிடப்பட்ட இந்தியன் 3 டிரைலரை சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் லீக் செய்து படக்குழுவுக்கு பயங்கர தலைவலியை உண்டாக்கி விட்டது.

வீரசேகரன் லுக்கில் கமல்: அனிருத் இசையில் இடம்பெற்ற “பாரா” பாடல் பீரியட் பாடலாச்சே, அதை எப்படி இந்தியன் 2வில் வைப்பார்கள் என நினைத்த ரசிகர்களுக்கு, அவர்கள் நினைத்தது சரி தான் என்பது போல, இந்தியன் 3ல் தான் அந்த பாடல் வருகிறது. ஆனால், இந்தியன் 2வின் கிளைமேக்ஸில் அந்த பாடலுடன் இந்தியன் 3 டிரைலரை வெளியிட்டுள்ளனர். அதில், சேனாபதி கமல்ஹாசன் தனது தந்தையும் சுதந்திர போராட்ட வீரர் தான் என்றும் அவர் பெயர் வீரசேகரன் என அவரை பற்றிய ஃபிளாஷ்பேக்கை சொல்கிறார். இந்தியன் 3 படம் முழுக்கவே பீரியட் போர் காட்சிகள் நிறைந்த படமாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

காஜல் அகர்வாலை காட்டிட்டாங்க: சேனாபதியின் அப்பா வீரசேகருனுக்கு ஜோடியாகத்தான் காஜல் அகர்வாலை காட்டுவார்கள் என ஏற்கனவே யூகித்ததை போலவே காஜல் அகர்வாலை சேனாபதியின் அம்மாவாகவே காட்டியுள்ளனர். சேனாபதியின் இளமைத் தோற்றம் என பல விஷயங்கள் இந்தியன் 3ல் இடம்பெறுவதை அந்த டிரைலரில் காட்டியுள்ளனர். இந்தியன் 3 எப்படி இருக்கும்?: இந்தியன் 3 படம் முழுக்கவே சுதந்திரத்துக்கு முன்பாக ஆங்கிலேயர்கள் இந்தியாவை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார்கள். வீட்டில் உள்ள பெண்களை எப்படி சூறையாடினார்கள். ஏன் சுதந்திர தாகம் தீயை போல கிளம்பியது என்பது தொடர்பாக சூப்பரான ஃபிளாஷ்பேக் கதையை சொல்லி இந்தியாவிற்கு சுதந்திரம் எப்படி வந்தது என தெரிந்துக் கொள்ளுங்கள். அதை லஞ்சம் வாங்கியும் தவறான விஷயங்களையும் செய்து கெடுத்து விட வேண்டாம் என்று சொல்லும் படமாகவே இந்தியன் 3 இருக்கும் என தெரிகிறது. இந்தியன் 2 படத்தின் இறுதியில் வரும் இந்தியன் 3 ஒவ்வொரு காட்சிகளும் ப்யூர் கூஸ்பம்ப்ஸ் தான்.