கேரளாவில், இதுவரை நடந்த தேர்தல்களில், மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வந்தது.
பா.ஜ., மூன்றாவது இடத்தையே பிடித்து வந்தது. கேரளாவில் பா.ஜ.,வுக்கு இடமில்லை என்றே, மார்க்சிஸ்ட் கம்யூ., – காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்து வந்தன.
ஆனால், இந்த முறை, கேரளாவில் பா.ஜ., தன் வெற்றிக் கணக்கை முதன்முறையாக துவக்கி உள்ளது. அக்கட்சிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கியவர், பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி.
கடந்த 2016 அக்டோபரில் பா.ஜ.,வில் இணைந்த அவர், ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கேரளாவில் பா.ஜ.,வின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். 2019ல் நடந்த தேர்தலில், திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் கோபி, முதல் தேர்தலிலேயே, 8.2 சதவீத ஓட்டுகள் வாங்கினார். இது, அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்தது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், திருச்சூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறக்கப்பட்ட சுரேஷ் கோபி, 31.3 சதவீத ஓட்டுகள் பெற்றார். இது, 2016 சட்டசபை தேர்தலில் அக்கட்சி பெற்றதை விட 12 சதவீதம் அதிகம். இந்த லோக்சபா தேர்தலில், திருச்சூர் தொகுதியில் களமிறக்கப்பட்ட சுரேஷ் கோபி, வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே தீவிர பிரசாரத்தை துவங்கினார்.
‘எனக்கு திருச்சூர் வேண்டும்’ என்ற முழக்கத்தை வைத்து, அவர் தீவிர பிரசாரம் செய்தார். அதன் பலனாக, 74,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
‘கேரளாவில் பா.ஜ., வுக்கு இடமில்லை’ என்று அறைகூவல் விடுத்து வந்த காங்., – மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகளுக்கு, இந்த வெற்றி பெரிய இடியாக உள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., ஆளுங்கட்சியாக இருந்தும், மொத்தமுள்ள 20 லோக்சபா தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கு, காங்., தலைமையிலான கூட்டணி, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கேரளாவில் இனி வரும் தேர்தல்களில், பா.ஜ.,வின் வளர்ச்சி வேகமெடுக்கும் என, அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை இருமுனை அரசியலையே சந்தித்து வந்த கேரளாவில், தற்போது மூன்றாவது சக்தியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது.