வெப்பநிலையை பொறுத்தவரை படிப்படியாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஈரோடு, திருப்பத்தூர், தருமபுரி, வேலூர், திருத்தணி, கரூர் பரமத்தி, சேலம் ஆகிய இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியது. இதில் அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இப்படியாக தமிழகத்தின் பல இடங்களில் வரலாற்றில் இல்லாத அளவு வெப்ப நிலை பதிவாகி வருகிறது.
அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைப்பொழிவு இருந்தது. அடுத்த நான்கு நாட்களில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் 38 டிகிரி செல்சியஸ் நிலவக்கூடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மே 2 மற்றும் 3ம் தேதிகளில் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊட்டியில் கடந்த 73 ஆண்டுகளில் பதிவானதை விட நேற்று அதிக வெப்பம் பதிவு செய்யப்பட்டது. நேற்று ஊட்டியில் 29 டிகிரி செல்சியஸ் (84.2 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவு செய்யப்பட்டது. கடந்த 1951ம் ஆண்டிலிருந்து இப்போது வரை பதிவான வெப்ப நிலையில் இதுதான் மிக அதிகம். கடந்த 73 ஆண்டுகளில் நேற்று தான் ஊட்டி மிகவும் வெப்பமான நாளை சந்தித்திருக்கிறது.