திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக கருப்புச்சாமி என்பவர் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் கோமங்கலம் அடுத்துள்ள கூலநாய்க்கன்பட்டி ஆகும். நேற்று ஏப்-23 காலை கருப்புச்சாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட கருப்புச்சாமி குறித்து சக கிராம நிர்வாக அலுவலர்கள் கூறியதாவது; கருப்புச்சாமி நல்ல மனிதர். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குரூப்-1,2 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். கிராம நிர்வாக அலுவலர்கள் அறக்கட்டளைக்கு தமிழகத்திலேயே அதிகபட்சமாக சுமார் 73 ஆயிரம் ரூபாய் தொகையை இதுவரை வழங்கியுள்ளார். கொரோன பேரிடர் காலங்களில் நிறைய நபர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார். இப்படி ஒரு முடிவு எடுப்பார் என நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றனர் சோகமாக.
கிராம நிர்வாக அலுவலர் கருப்புச்சாமி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியிலும் வருவாய் துறையினரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.