ஒரு பக்கம் பரந்து விரிந்த கடல், மறுபக்கம் விவசாயம் எனப் பெரு நிலப்பரப்பைக் கொண்ட இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், இஸ்லாமியர் கணிசமாகவும், யாதவர், நாடார், கிறிஸ்துவர் அதற்கடுத்த எண்ணிக்கையிலும் இருக்கிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்திலிருந்து திருச்சுழியையும், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அறந்தாங்கியையும் தன்னோடு இணைத்துக்கொண்டு இராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பெரிய மக்களவை தொகுதியாக உள்ளது இராமநாதபுரம்.
இந்த மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி, அதிமுகவில் ஜெயபெருமாள், பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியில் சந்திரபிரபா ஜெயபால் மற்றும் ஒ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் வேட்பாளரும் சிட்டிங் எம்பியான நவாஸ்கனி சாயல்குடி அருகேயுள்ள குருவாடி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். எஸ்.டி டிராவல்ஸ், எஸ்.டி கார்கோ, எஸ்.டி கூரியர் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். தன் அரசியல் வாழ்விற்கு முன்ேப, தனது அறக்கட்டளை மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவிகளைச் செய்தவர்.
தான் எம்.பி-யாகப் பதவியேற்றதிலிருந்து தற்போது வரை 3,100 மாணவர்களுக்கு சொந்த நிதியில் உயர்கல்வி படிப்பதற்கு உதவியுள்ளார். இராமநாதபுரம் குண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்க-வை நேரில் சந்தித்து, தமிழக-இலங்கை மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட அவைத் தலைவராக உளளார். இவரின் பூர்வீகம் முதுகுளத்தூர் அருகேயுள்ள புளியங்குடி கிராமம். ஓபிஎஸ்-க்கு இந்த தொகுதியில் அதிக செல்வாக்கு உள்ளதால், அதே சமுதாயத்தைச் சேர்ந்த இவரை களமிறக்கியுள்ளனர். இவரின் அண்ணன் ஐஏஎஸ் அதிகாரியான பொன்னையா ஊரக வளர்ச்சித்துறை ஆணையராக உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தான் இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும் என்று பாஜக கூட்டணியுடன் இணைந்து பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார்.அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.இதனையடுத்து அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று நடத்திய சட்டப்போராட்டங்களில் தொடர் தோல்வி. இனி நீதிமன்றத்தை நம்பி எந்த பயனுமில்லை என்பதால் மக்களவையில் களமிறங்கியுள்ளார்.
இங்கு திமுக கூட்டணி இயூமுலீ, அதிமுக, பாஜக கூட்டணி ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது.2019 தோ்தலில் சிட்டிங் எம்பி நவாஸ்கனி 44.08%, வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டு 32.16% வாக்குகள் பெற்று 2-ம் இடம் இடத்திலும், அமமுக 13.3% வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தது. அதேவேளையில், 2014-ல் பாஜக, அதிமுக கூட்டணியின்றி போட்டியிட்டு 1,71,082 வாக்குகள் பெற்றுள்ளது. தற்போது பாஜகவில் அமமுக உள்ளதால் அதன் வாக்குகளும் கிடைக்கும். தனது சமூக வாக்குகளும் கிடைக்கும். குறிப்பாக தன் மேல் இருக்கும் அனுதாப அலைகளும் கடற்கரை மாவட்டத்தில் நம்மை கரையேற்றும் என்று நினைக்கிறார் ஓபிஎஸ்.
அதிமுக 2014 தேர்தலில் தனித்து நின்று 4 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கியது. இங்கு அதிமுகவுக்கு நல்ல வாக்குவங்கி உள்ளது. அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளும் ஓபிஎஸ்-யும் ஒரே சமூகத்தை சார்ந்தவர் என்பதால், சிதறும் வாக்குகள் தனக்கு சாதகமாகும். போதாக்குறைக்கு ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 சுயேட்சை வேட்பாளர்களை இறக்கியுள்ளதும் ஓபிஎஸ்-க்கு மைனஸ்தான். தன் சமூக வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்காமல் போகும் பட்சத்தில் நமக்கு கிடைத்தால் மேலும் பலம் என வெற்றிக் கணக்கு போட்டு வருகின்றார் ஜெயபெருமாள்.
2019 தேர்தலில் சிட்டிங் எம்பி நவாஸ்கனி 4 லட்சத்து 69 ஆயிரம் வாக்குகள் பெற்றார். வெற்றி வித்தியாசம் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள். அப்போது திமுக ஆளுங்கட்சியாக கூட இல்லை. எதிர்கட்சியாக இருந்தபோதே 1 லட்சத்து 50 வாக்குகள் வித்தியாசத்தின் வெற்றிபெற்றோம். இப்போது வலிமையான இந்தியா கூட்டணியில் உள்ளது. ஆளுங்கட்சியின் திமுக வாக்குவங்கி, சிறுபான்மையினர்களின் ஓட்டுகள், திமுக அரசு மக்களுக்கும், மகளிருக்கான பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதால் மொத்த மகளிர் ஓட்டும் எங்களுக்குத்தான் என்கிறார்கள் கோரஸாக..
திமுக கூட்டணி வேட்பாளர் இயூமுலீ கட்சி வேட்பாளரும் சிட்டிங் எம்பியுமான நவாஸ்கனி வெற்றிக்கனியை சுவைப்பார். அதிமுகவும்-(பாஜக)ஓ.பன்னீர்செல்வமும் இரண்டாம் இடத்திற்கான இழுபறியில் உள்ளனர் என்பதே தற்போதைய கள நிலவரம்.
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.