தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பெரம்பலூர் தொகுதியில் திமுக  மற்றும் அ.தி.மு.க கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. பெரம்பலூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், முசிறி, குளித்தலை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி. இதில், முத்தரையர்கள் சமூகத்தினர் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து, உடையார், வெள்ளாளர், ரெட்டியார், முதலியார், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் எனப் பல்வேறு சமூகத்தினரும் கூடி வாழ்கிறார்கள்.

தி.மு.க-வில் அருண் நேரு, அ.தி.மு.க-வில் சந்திரமோகன், பாஜக கூட்டணியான ஐ.ஜே.கே-வில் பாரிவேந்தர், நாம் தமிழர் கட்சியில் தேன்மொழி ஆகியோர் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு தி.மு.க வேட்பாளராகியுள்ளார். விவசாயம் மற்றும் அரிசி ஆலை நிர்வாகத்தை கவனித்து வருகிறார். அரசியல் பிரவேசம் எடுத்தவுடன் கட்சி நிகழ்ச்சி, பொதுக் கூட்டங்கள், தொண்டர்கள் வீட்டு நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் தந்தை செல்ல முடியாத நிகழ்ச்சிகளில் இவர் நேரடியாக கலந்து கொண்டார்.

மக்களை சந்தித்து குறைகளை கேட்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, இளைஞர்களின் விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைப்பது, போன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு மக்களுக்கு பிரபலமான முகமாக திகழ்ந்து வருகிறார். அருண் நேரு போட்டியிடுவதால் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அ.தி.மு.க வேட்பாளர் சந்திரமோகன் தொகுதியில் பெரிதாக அறிமுகம் இல்லாதவர். பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக உள்ளார். கட்சியினர் பலருக்கே இவரை அதிகம் தெரியவில்லை. கான்ட்ராக்ட் வேலை எடுத்து செய்வதில் ஈடுபாடாக இருப்பவர். இவருடைய அரசியல் பின்னணி என்று பார்த்தால், ஒருகாலத்தில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும், திருச்சியில் நின்று வென்ற ஒரே தி.மு.க எம்.பி-யான செல்வராஜின் தம்பி துரைராஜின் மகன் தான் இந்த சந்திரமோகன். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை என்றனர்.

பா.ஜ.க கூட்டணியான ஐ.ஜே.கே கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் தற்போது பெரம்பலூர் சிட்டிங் எம்பியாக இருக்கிறார். 2019 மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணியுடன் போட்டியிட்டு வென்றவர். பின்னர் தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க கூட்டணிக்கு தாவி விட்டார். ஐ.ஜே.கே கட்சியின் தலைவராக உள்ளார். சிட்டிங் எம்.பி பாரிவேந்தர் மீது தொகுதி வாக்காளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.உருப்படியாக எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை கொடுத்த வாக்குறுதிகளில் எவற்றையும் செய்யவில்லை. ஏன் நன்றி சொல்லக்கூட தொகுதிப்பக்கம் வரவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை என்கிறார்கள். சிட்டிங் எம்.பி-க்கு எதிரான அதிருப்தி குரல்கள் கணீர்.. கணீர்.. எனக் கேட்கிறது.

கடந்த முறை தி.மு.க தயவில் தான் பாரிவேந்தர் வெற்றிபெற்றார். பெரம்பலூர் மக்களவை தொகுதி தி.மு.க-வின் கோட்டை. இங்கு அதிக முறை திமுகதான் வென்றுள்ளது. அதோடு, இத் தொகுதியில் அமைச்சர் நேருவுக்கும் அதிகப்படியான செல்வாக்கு உள்ளது. தி.மு.க-வின் சாதனைத்திட்டங்கள் எங்களுக்கு வெற்றிமாலையைத் தேடித்தரும். அருண் நேரு எந்த சிரமம் இல்லாமல் எளிதாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்கின்றனர்.