திண்டுக்கல் மக்களவைத் தொகுதி யாருக்கு?

திண்டுக்கல் மக்களவை தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக யாரும் எதிர்பாராத வகையில் திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மக்களவை தொகுதியில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை ஆகிய 6 தொகுதிகள் உள்ளன.

திமுக கூட்டணி சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்.சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நெல்லை முபராக்கும், பாஜகவின் கூட்டணி சார்பில் பாமக கட்சியை சேர்ந்த திலகபாமாவும், நாம் தமிழர் கட்சியில் துரை கையிலைராசன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

இந்த தொகுதியில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் தான் நேரடிப்போட்டி நிலவுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளரும் வேட்பாளருமான ஆர்.சச்சிதானந்தம் 37 ஆண்டுகளாக கட்சியில் முழுநேரமும் களப்பணியாற்றி வருகின்றார். 26 வயதில் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவராக 1996-2006 என இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டு எவ்வித லஞ்ச, ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை நடத்தியவர். அடித்தட்டு மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.

எம்ஜியாரின் சென்டிமென்ட் தொகுதியான திண்டுக்கல் தொகுதியை எஸ்டிபிஐ-க்கு தாரை வார்த்துவிட்டது என்ற கோபத்தில் உள்ளனர் அதிமுகவினர். நத்தம் விசுவநாதனும், சீனிவாசன் ஆகியோருக்கு இடையே நிலவும் கோஷ்டி பூசலால் தான் இங்கு அதிமுக உருப்படாமல் போயுள்ளது. திண்டுக்கல் சீனிவாசன் மகன் சதீஷ், நத்தம் விஸ்வநாதன் மைத்துனன் கண்ணன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராகலாம் என எதிர்பார்த்தோம். மாவட்டத்தில் திமுகவின் செல்வாக்கு அதிகம் உள்ளதால் இருவருமே “ஆளவிடுங்கப்பா” என்றதால்தான் இந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு தாரை வார்க்கப்பட்டது.

எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் முபாரக் குடியுரிமை திருத்தச்சட்டம், இசுலாமிய மக்களின் அடிப்படை வாழ்வாதார போராட்டங்களில் பங்கெடுத்தவர். நல்ல பேச்சாளர். தொகுதி முழுக்க உள்ள கணிசமான இசுலாமியர்கள் வாக்குகள் இவருக்குத்தான் என்கின்றனர். இளவயதுக்காரர், சுறுசுறுப்போடு பணியாற்றுகிறார், இசுலாமிய இளைஞர்கள் அணிவகுக்கின்றனர். அதோடு, இரட்டை இலை சின்னத்தில் நிற்பது கூடுதல் பலம் என்றாலும், இலை கட்சியினர் கூட்டணி கட்சியினரை மாற்றுக் கட்சியாகத்தான் பார்க்கின்றனர். தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டுகின்றனர். தேர்தல் செலவு செய்ய மாவட்டத்தின் முன்னாள் இரு அமைச்சர்களும் தயாராக இல்லை, வேட்பாளரிடம் பெரிய பொருளாதாரமும் இல்லை என்பதால் தொண்டர்கள் சோர்வாக உள்ளனர்.

பாஜக கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் திலகபாமா பாமகவில் மாநில பொருளாளராக உள்ளார். எழுத்தாளரான இவர் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்தவர். 2016ம் ஆண்டு சிவகாசி சட்டமன்ற தேர்தலிலும், 2021ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் பாமக சார்பில் களமிறக்கப்பட்டார். திண்டுக்கல்லில் பலமுறை தோற்றாலும், மாம்பழம் பரிட்சையமான சின்னம் என்பதால் இங்கு மீண்டும் போட்டியிடுகின்றது பாமக.

திண்டுக்கல் மக்களவை தொகுதி முழுக்க பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஜரூர் வேலைகள் செய்வதில்லை. அதோடு, பாமகவினரின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக உள்ளது. கூட்டணி என்பதால் பாஜகவிடமும் பெரிய எழுச்சியில்லை, பசையும் இல்லை, கோஷம் போடக்கூட ஆளில்லை என்பதால் திலகபாமாவிற்கு இம்முறையும் திண்டாட்டம் தான் என்கின்றனர்.

திண்டுக்கல் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிடாமல் மா.கம்யூ கட்சிக்கு ஒதுக்கியுள்ளதையும் அது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாததும் தங்களுக்கு சாதகமா இருக்கும் என்று எண்ணுகிறது அதிமுக கூட்டணி, திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடாதது பாமகவிற்கு சாதகமாக பார்க்கிறது.

அரசியல் ஆர்வலர் ஒருவர் கூறியதாவது, நீண்ட இடைவெளிக்கு பிறகு சிபிஎம் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் மிகப்பெரிய பலமே அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி, பழநி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோரும் தான். கூட்டணிக் கட்சிதானே என்று தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டினால் சும்மா இருக்கமாட்டர்கள்.

இரு அமைச்சர்களுமே பவர் சென்டர் என்பதால் தேர்தல் வேலைகளுக்கும், வைட்டமின் “ப” வுக்கும் பஞ்சமிருக்காது. போதாக்குறைக்கு சூறாவளிப் பிரச்சாரம் செய்யும் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ-வின் தேர்தல் பணிக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. தோழர் சச்சிதானந்தத்திற்கும் தொகுதிக்குள் எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.

தற்போதைய களநிலவரப்படி திமுகவின் கூட்டணியான மா.கம்யூ கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றியின் வாயில்படியில் நிற்கிறார் என்கின்றனர்.

தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.