தருமபுரி மக்களவை தொகுதியில் பாஜக-பாமக கூட்டணி சார்பில், அன்புமணியின் மனைவியும் பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா அன்புமணி போட்டியிடுவதால் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஸ்டார் தொகுதியாக இருந்த தர்மபுரி, மீண்டும் ஸ்டார் தொகுதி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. 

1951-ல் உருவாக்கப்பட்டு, 1977-ம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்ட தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குள் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுகவில் போட்டியிட்டு வெற்றிபெற்று எஸ்.செந்தில்குமார் எம்பி-யாக பதவியேற்றார்.

வன்னியர் சமூக மக்கள்தான் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். ஆதிதிராவிடர், கொங்கு வேளாளர் சமூகத்தினரும் அதற்கடுத்த எண்ணிக்கையில் பரவலாக வாழ்கிறார்கள். ஆங்காங்கே மலைகளில் பழங்குடி மக்கள் கூடி வாழ்கிறார்கள்.

திமுகவில் தருமபுரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளா் ஆ.மணி, அதிமுகவில் தருமபுரி நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவியின் மகன் மருத்துவா் அசோகன், பாஜக கூட்டணியான பாட்டாளி மக்கள் கட்சியில் சௌமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா், அக்கட்சித் தலைவா் அன்புமணியின் மனைவி என்பதால் நட்சத்திர வேட்பாளராகக் கருதப்படுகிறாா். நாம் தமிழா் கட்சியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருத்துவா் அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளும் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைக் கொண்டுள்ளன. தருமபுரி மக்களவைத் தொகுதியில் 7,64,878 ஆண் வாக்காளா்கள், 747,678 பெண் வாக்காளா்கள் மற்றும் 176 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 15,12,732 வாக்காளா்கள் உள்ளனா். இந்தத் தொகுதி, இதுவரை 13 மக்களவைத் தோ்தலைச் சந்தித்துள்ளது. அதில், அதிமுக-2, திமுக-3, பாமக-4, காங்கிரஸ்-2 முறை வென்றுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் ஒருமுறை வென்றுள்ளது. சுயேச்சை ஒருமுறை வென்றுள்ளாா்.

இந்தத் தொகுதியைப் பொருத்த வரையில், திமுகவுக்கு காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கொமதேக, முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலம் உள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் வென்ற கட்சி இது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவைச் சோ்ந்தவா்களே கடந்த பேரவைத் தோ்தலில் வென்று சட்டப் பேரவை உறுப்பினா்களாக இருப்பதால், அதிமுகவுக்கும் கணிசமான வாக்கு வாங்கி உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொருத்த வரையில், தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட தருமபுரி, பென்னாகரம், மேட்டூா் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளில் வென்று தற்போது 3 பேரவை உறுப்பினா்களை வைத்துள்ளது. இதுவரை அதிக முறை வென்ற கட்சி என்ற அடையாளத்துடன், கணிசமான வாக்கு வங்கியைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே, தருமபுரி மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரை திமுக- அதிமுக-பாமக ஆகிய மூன்று கட்சிகளுமே பலமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ளன. நாம் தமிழா் கட்சியும் களத்தில் போராட உள்ளது.

பாஜக கூட்டணியில் அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக தருமபுரி முதலிடத்தில் இருந்து வருகிறது. சௌமியா அன்புமணியின் வெற்றிக்கு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறார்கள் பாமகவினர். இந்த தொகுதியில் அன்புமணிக்கும் வெற்றியும் அளித்துள்ளனர் அதேசமயம் தோல்வியையும் அளித்துள்ளனர் இம்மக்கள்.

தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக-பாமக இடையேயான கடும் இழுபறி நீடிக்கிறது..

தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.