ஆறுகள் அழகு சேர்க்கின்ற தொகுதி ஆரணி. பட்டுக்கும், கோரைப்பாய் நெசவுக்கும், அரிசி உற்பத்திக்கும், சிற்பத் தொழிலுக்கும்கூட புகழ்பெற்ற இந்தத் தொகுதியில் பெரும்பாலும் கிராமங்களை உள்ளடக்கிய நடுத்தர, அடித்தட்டு மக்கள்தான் அதிகம் வசிக்கிறார்கள்.
சுமார் 15 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில், வன்னியர்களும், அதற்கடுத்த எண்ணிக்கையில் பட்டியலினத்தவர், முதலியார் சமூகத்தினரும், கணிசமாக இஸ்லாமியர்களும் வசிக்கிறார்கள். போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, செஞ்சி, மயிலம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியது
ஆரணி தொகுதி. 2008-ம் ஆண்டில், வந்தவாசி நாடாளுமன்றத் தொகுதி கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆரணி நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. மறுசீரமைப்புக்குப் பிறகு கடந்த 2019-ல் மூன்றாவது மக்களவைத் தேர்தலைச் சந்தித்த ஆரணி தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.கே.விஷ்ணு பிரசாத் வெற்றிபெற்று எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கு 3 முறை நடந்த எம்பி தேர்தல்களில் காங்கிரஸ் இரு முறையும் அதிமுக ஒரு முறையும் வென்றுள்ளது.
திமுகவில் தரணி வேந்தனும், அதிமுகவில் கஜேந்திரன், பாஜக கூட்டணியான பாமகவில் கணேஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பாக்கியலட்சுமி ஆகியோர் ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளர், தரணி வேந்தன் தற்போது வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். ஊராட்சித்தலைவர், 2 முறை கூட்டுறவு சங்க தலைவர், 6 முறை ஒன்றிய செயலாளர், 7 வருடம் மாவட்ட துணை செயலாளர், மாவட்ட பொருளாளர், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் என பல பொறுப்புக்களில் பணியாற்றிவர். மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.ஆரணி தொகுதியை திமுக நேரடியாக கைப்பற்றியதில்லை. ஆரணி தொகுதியை கைப்பற்றி இது திமுகவின் கோட்டை என நிரூபிக்க தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலுவின் அபிமானத்தைப் பெற்றவர் என்பதால் அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பிற்கு பஞ்சம் இருக்காது என்கிறார்கள்.
அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளராக உள்ளார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்த மக்கள் நலத்திட்டங்களை எடுத்துகூறி வாக்குச்சேகரித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் பழம்கால கோயிலான புத்திர காமேட்டீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் முன்னெடுத்ததாகவும் அங்கு கோயிலுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் திருமண மண்டபத்தை கட்டிக் கொடுத்ததாகவும் கூறுகின்றனர். மேலும் ஆரணி தொகுதியில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று தீவிரமான வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாமக வேட்பாளர் கணேஷ் குமார் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.இவர் முன்னாள் செஞ்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால் தொகுதிக்குள் நல்ல அறிமுகம். மற்றொரு தொகுதியான மயிலம் தொகுதியில் தற்பொழுது பாமகவை சேர்ந்த சிவகுமார் எம்எல்ஏவாக உள்ளார். ஆரணி மற்றும் போளூர் ஆகிய பகுதிகளில் பாமகவிற்கு கணிசமான வாக்கு வாங்கி உள்ளது.மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகம் பாமகவை சேர்ந்தவர்களாக இருப்பதால் எப்படியும் வெற்றி கிடைக்கும் என நம்புகிறார்கள்.
இங்கு மும்முனைப்போட்டி நிலவிவருகிறது. அதிமுக, பாமக பிரிக்கும் வாக்குகள் திமுகவை பாதிக்காது என்கின்றனர். திமுகவின் திட்டங்களால் புதியவர்கள் மற்றும் நடுநிலையாளர்களின் வாக்குகள் அதிகளவில் கிடைக்கும்.வலுவான திமுக கூட்டணி, திமுகவின் திட்டங்கள், ஆளுங்கட்சி என்ற இமேஜ், அமைச்சர் எ.வ.வேலுவின் தேர்தல் வியூகம் போன்றவைகள் திமுகவிற்கு வெற்றியைத் தேடித்தரும் என்கின்றனர்.
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.