கிபி 949-ல் தக்கோலத்தில் சோழர்கள், ராஷ்டிரகூடர்கள் இடையிலான போரில் சோழர் படைக்குத் தலைமை தாங்கிய ராஜாதித்தர் கொல்லப்பட்டார். சோழர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்திய இந்தப் போர் நடந்த தக்கோலம் தான் தற்போது அரக்கோணம்.
இந்தத் தொகுதிக்குள், ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், வேலூர் வருவாய் மாவட்டத்திலுள்ள காட்பாடி, திருவள்ளூர் வருவாய் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இங்கு வன்னியர் சமூக மக்கள்தான் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். பட்டியலினத்தவர், முதலியார், யாதவர், இஸ்லாமியர் அதற்கடுத்த எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு ஜெகத்ரட்சகன் வெற்றிபெற்று எம்.பி-யாக உள்ளார்.
சிட்டிங் எம்பியும் திமுக வேட்பாளருமான ஜெகத்ரட்சகன் அடிப்படையில் மிகப்பெரிய தொழிலதிபர். மத்திய அமைச்சராகவும், 3 முறை அரக்கோணம் மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தான் எம்.பி-யாக இருந்த இத்தனை காலத்தில், பத்தாயிரம் ஜோடிகளுக்கு இலவசத் திருமணங்களை நடத்திவைத்துள்ளேன். அனைத்து கிராமங்களிலும் குடிதண்ணீர் பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கிறது. அனைத்து ஊர்களிலும் பள்ளிகள் கட்டிக் கொடுத்திருக்கிறேன். ஆறேழு இடங்களில் பெரிய பெரிய பேருந்து நிலையங்களை உருவாக்கியிருக்கிறேன். பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறேன் என தனது வளர்ச்சித் திட்டங்களை அடுக்கியவாறு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஓன்றிய செயலாளராக இருந்து வருகிறார். சோளிங்கர் பேரூராட்சி மன்றத் தலைவராக பணியாற்றிவர். கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்த நலத்திட்டங்களைக் கூறி பிரச்சாரம் செய்கிறார். இருப்பினும், அதிமுகவின் தேர்தல் வேலைகளில் சோம்பல் நிறைந்துள்ளது என்கிறார்கள்.
பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு, தொகுதியில் தங்களுக்கென உள்ள சமூக வாக்குவங்கி, ரயில்வே மந்திரியாக பாமக ஆர்.வேலு இருந்தபோது இதே தொகுதியில் நிறைவேற்றிய மூன்று ரயில்வே மேம்பாலத் திட்டங்கள், மேலும் அவரால் கொண்டு வரப்பட்ட சர்க்குலர் ரயில் திட்டம் போன்றவற்றை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் பாமகவினர். பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளையும் பலமாக பார்க்கிறது பாமக. எப்படியும் தேறிவிடலாம் என நினைக்கின்றனர்.
இது திமுகவிற்கு சாதகமான தொகுதியாக இருந்தாலும், சிட்டிங் எம்பியை எளிதில் அணுகமுடிவதில்லை. தொழிலதிபர் என்பதால் அவரை நெருங்க முடிவதில்லை. பெரியளவு திட்டங்கள் எதையும் தொகுதிக்கு பெற்றுத்தரவில்லை என்கிறார்கள். இருப்பினும், இது திமுகவிற்கு சாதகமான தொகுதியாவே பார்க்கப்படுகிறது.