2019 பாராளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் அலைதான் வீசியது. ஆனால் இம்முறை ஸ்டாலின் புயல் வீச உள்ளது. இந்த முறையும் பொள்ளாச்சி மக்களவை தொகுதி எங்களுக்குத்தான் மற்ற கட்சிகளுக்கு நாமம் தான் என்கின்றனர் உடன்பிறப்புக்கள். கடந்த முறை பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. அந்த சமயம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தினால் அதிமுகவிற்கு நெருக்கடியான காலகட்டம். அதனால்தான் அதிமுகவின் இரும்புக் கோட்டையான பொள்ளாச்சி மக்களவை தொகுதி கைவிட்டுப்போனது. ஆனால் இம்முறை நிச்சயம் அதிமுகதான் வெற்றிவாகை சூடும் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ளன. மேற்படி ஆறு சட்டமன்ற தொகுதிகளும் அதிமுக வசமே உள்ளதால், பொள்ளாச்சி மக்களவை தொகுதி அதிமுகவிற்கு சாதகமாக உள்ளது என்று கருதுகின்றனர். 2019 மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கு.சண்முகசுந்தரம் வெற்றிபெற்றார்.
எம்பி எப்படி?
எம்பி குறித்து தொகுதியில் பல்வேறு தரப்பினரிடம் விசாரித்த போது… 2009 பாராளுமன்ற தேர்தலின் போது, பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கு வேட்பாளர் சண்முகசுந்தரம் என அறிவிப்பு வெளியான போது, இவுரு யாருய்யா எங்க இருக்காரு? என்று கட்சிக்காரர்களே கிறங்கி நின்றனர். அப்போதுதான் தெரிந்தது, மடத்துக்குளம் வட்டம், பெருமாள் புதூரை சேர்ந்தவர். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணனும், சண்முகசுந்தரமும் தொழில்முறை நண்பர்கள் என்று. எனவே கே.என்.நேரு மூலமாக சீட் பெற்றார். கரைவேட்டி கட்டாமல் டக்இன் செய்து தயாநிதி மாறன் ஸ்டைலில் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார். பொள்ளாச்சியை சேர்ந்த சீனியர் ஒருவர் தனக்குத்தான் எம்பி சீட் கிடைக்கும் என்று பொங்களூரார் மேல் நம்பிக்கை வைத்து காத்திருந்தார். ஏன் தேர்தல் அலுவலகத்தையே தயார் நிலையில் வைத்திருந்தார். இருப்பினும் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இருப்பினும், தேர்தல் அலுவலகத்தை வேட்பாளருக்காக தயார் செய்தார். கட்சியினரிடம் தேர்தல் வேலைகளில் ஒற்றுமையில்லை, சுறுசுறுப்பில்லை, முற்றிலும் அறியப்படாத வேட்பாளர், அதிமுகவின் வாக்குபலம் போன்ற காரணங்களால் அதிமுக வேட்பாளர் கே.சுகுமார் வெற்றிபெற்றார். பின்னர் கட்சி கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் என எதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்தார்.
பத்து வருடம் கழித்து 2019 இல் இதே மக்களவை தொகுதியில் தனது செல்வாக்கால் மீண்டும் போட்டியிட்டார். 2019 காலகட்டத்தில் ஸ்டாலின் ஆதரவு நிலைப்பாடு அமோகமாக இருந்ததாலும், அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருந்ததாலும் சண்முகசுந்தரம் எளிதாக வெற்றி பெற்றார். தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்துதல், தொழில் மற்றும் கல்விக் கடன் திட்டங்கள், பயிற்சி வகுப்புகள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல் போன்ற சில விசயங்கள் இவரின் பாசிட்டிவான பக்கங்கள் என்றாலும், கட்சிக்காரர்களுக்கு பெரியளவில் சிபாரிசுகள் ஏதும் செய்ய மாட்டார். தொகுதிக்குள் அடிக்கடி தலை காட்ட மாட்டார். தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருப்பவர். அடிமட்ட தொண்டர்களுடன் தொடர்பில் இல்லாதவர். தனக்கென்ற குறுகிய வட்டத்திலே இருப்பார் என்று இவரின் நெகட்டிவ் பக்கங்களும் நீள்கிறது. இருப்பினும் சிட்டிங் எம்பி சண்முகசுந்தரம் எவ்வித ஊழல் புகாருக்கும் ஆளாகாதவர். மேடைகளில் நன்றாக பேசுவார் என்றனர்.
திமுக எம்பி சீட் ரேஸில் யார் யார்?
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட சிட்டிங் எம்பி கு.சண்முகசுந்தரம், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஈஸ்வரசாமி, உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.எம், தங்கராஜ் (எ) எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி மற்றும் குடிமங்கலம் பகுதியை சேர்ந்த ஷியாம் பிரசாத் (இவரின் தந்தை ஒன்றிய குழு தலைவராக இருந்தவர்) மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் தீவிரமாக முயன்று வருகின்றனர். மற்ற மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பெயரளவிற்கே விருப்பமனு அளித்துள்ளனர்.
கே.ஈஸ்வரசாமி – ஈ.ஆர்.எஸ்.
மடத்துக்குளம் வட்டம், மைவாடி ஊராட்சி கருப்புச்சாமிபுதூர் எனும் குக் கிராமத்தை சேர்ந்த மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஈஸ்வரசாமி சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, குறுகிய காலத்தில் தொழிலிலும், அரசியலிலும் அசுர வளர்ச்சியடைந்தவர். தனது அரசியல் வாழ்வை 2007 இல் மைவாடி ஊராட்சி கருப்புச்சாமி புதூர் கிளைக்கழக ஒன்றியப் பிரதிநிதி பொறுப்பில் தொடங்கி, 2014 இல் மடத்துக்குளம் ஒன்றிய பொருளாளராக பொறுப்பு வகித்தார். 2016 இல் உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் அப்போது நீதிமன்றம் தமிழகம் முழுவதும் மேற்படி உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்து விட்டது. அதன்பின், 2019 இல் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றிபெற்று ஒன்றிய துணைத்தலைவராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார். (இவரின் மனைவி லதா பிரியா தற்போது மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக உள்ளார்) இதையடுத்து 2020 இல் ஒன்றிய பொறுப்பாளர், 2022 முதல் தற்போது வரை மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.
விவசாயம், இருசக்கர வாகன விற்பனை, ஜல்லி கிரஷர், கல்வி நிறுவனம், ரியல் எஸ்டேட், நூற்பாலை உள்ளிட்ட இன்னும் சில தொழில்களை செய்து வருவதால் வைட்டமின் ப-வுக்கு பஞ்சமில்லாதவர். கழகத் தோழர்களை அரவணைத்து செல்வார். கட்சியினர் யாராவது வருத்தத்தில் இருந்தால் உடனடியாக பேசி சரிசெய்து விடுவார். கழக முன்னோடிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார். ஒன்றியத்திற்குட்பட்ட 11 பஞ்சாயத்திலும் உள்ள திமுக தொண்டர்களின் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றுவதால் இவருக்கு திமுகவினரின் ஆதரவு அமோகமாக உள்ளதாம். குறிப்பாக எதிரிகளை வளர்த்துக் கொள்ள மாட்டார். விளையாட்டுப் போட்டி, கோவில் விழா, காரியம் கணக்கு என்றால் முன்வந்து உதவுவார் என்கின்றனர்.
தனது ஒன்றியத்திற்குட்பட்ட சதீஷ்குமார் என்பவர் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடுக்கு சென்று திரும்பி வரும் வழியில் விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார். தகவலறிந்த கே.ஈஸ்வரசாமி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வேண்டிய உதவிகளை செய்து, உடற்கூராய்வு முடிந்து உடலை கொண்டு வரும் வரையில் கூடவே இருந்தார். இவரின் தீவிர முயற்சியால் தான் சதீஷ்குமார் குடும்பத்தினருக்கு திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பாக 7 லட்சம் உதவித்தொகை கிடைத்தது என்றனர்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், தனக்கு பதவி வழங்கி அழகு பார்த்த மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர்களின் பரிபூரண ஆதரவும் கே.ஈஸ்வரசாமிக்கு உள்ளதால் ஈ.ஆர்.எஸ்-க்கு இனி சுக்கிர திசைதான் என்றார் மாவட்ட நிர்வாகி ஒருவர்.
எஸ்.கே.எம்.தங்கராஜ் (எ) எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி
சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி வேட்பாளர் பட்டியல் வெளிவரும் வரையில் எஸ்.கே.எம், தங்கராஜ் (எ) எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி யின் பெயர் கடந்த நான்கு தேர்தல்களின் உத்தேச பட்டியலில் இருந்துகொண்டே இருக்கிறது. அவ்வாறு தொடர் முயற்சி செய்து வருகிறார். உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள சின்னவீரம்பட்டிதான் இவரின் சொந்த ஊர். இவர் தந்தை கந்தசாமி சுமார் 20 வருடங்களாக என்.எல்.ஒ தொழிற்சங்கத்தில் தலைவராக இருந்து கோலோச்சியவர். ரியல் எஸ்டேட், விவசாயம், ஹோம் அப்லையன்ஸ் ஏஜென்சீஸ் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருகிறார். பசையுள்ள பார்ட்டி என்பதால், சீட் கிடைத்தால் மாளாத செலவு செய்வார் என்கின்றனர் இவரின் ஆதரவாளர்கள்.
அரசியல் வாழ்வை சின்னவீரம்பட்டி கிளை கழக செயலாளராக 1998 இல் தொடங்கினார். பின்னர், 2006 இல் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர், 2012 மற்றும் 2015 என இருமுறை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், 2021 திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர், 2022 முதல் தற்போது வரை உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக இருந்து வருகிறார். எவரிடமும் அதிர்ந்து பேச மாட்டார், கட்சி சீனியர், ஜூனியர்களை அரவணைத்து செல்வார், கட்சிக்காரர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் தவறாது பங்கேற்பதால் அடிமட்டத் தொண்டர்கள் வரை இவருடன் இணக்கமாக உள்ளனர். இளைஞரான இவருக்கு சீட் கொடுத்தால் சுறுசுறுப்போடு பணியாற்றுவார். இதுவரை எந்த சட்டச்சிக்கல்களிலும் தலையிடாத டீசன்ட் மேனாக இருந்து வருகிறார் எஸ்.கே.எம். தங்கராஜ் (எ) எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி.
மாவட்ட அமைச்சர், மாவட்ட செயலாளரிடம் இவருக்கு நல்லபெயர் உள்ளது. அதோடு, மேலிட நிர்வாகிகள் சிலரும் இவருக்கு ஆதரவாக களமிறங்கி காய் நகர்த்தி வருகின்றனர். எனவே சீட் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது என்றார் கட்சி சீனியர் ஒருவர்.
திருப்பூர், கோவை என இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கியது பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி. மாவட்ட அமைச்சர், இரண்டு மாவட்டங்களில் செயலாளர்கள் ஆகியோர்களின் சிபாரிசை மட்டுமே முழுமையாக ஏற்று சீட் வழங்க திமுக தலைமை தயாராக இல்லை. உளவுத்துறை ரிப்போர்ட் இம்முறை புதுமையாக பூத் வாரியாக எடுக்கப்பட்டுள்ளது. சிட்டிங் எம்பிக்களுக்கு நல்ல பெயர் உள்ளதா? மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவார்களா என்ற கோணத்தில் சர்வே நடத்தி ரிப்போர்ட்டை கையில் வைத்துள்ளது திமுக.
அதிருப்தியான பழைய முகத்தை மீண்டும் களமிறக்காமல், புதிய வேட்பாளர்களுக்கு சீட் கொடுத்தால் வெற்றி வாய்ப்பு இருக்குமா என்றும் ஆராய்ந்து வருகிறது தலைமை. இருப்பினும் இப்போதைய நிலவரப்படி சிட்டிங் எம்பியான கு.சண்முகசுந்தரத்திற்கு சீட் கிடைக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. புதிய முகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கும் பட்சத்தில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஈஸ்வரசாமி, உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி, ஷியாம் பிரபு ஆகியோர்களில் ஒருவருக்கு சீட் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம் திமுக சீட் ரேஸில் வெல்வது யாரென்று?