கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.1237.51 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்ததுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “எம்பி தேர்தல் மட்டுமல்ல, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெல்வது நிச்சயம். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளோம். கலைஞர் மகளிர் உரிமை திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண், இல்லம் தேடி கல்வி, காலை உணவு, நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், கள ஆய்வில் முதல்வர், இன்னுயிர் காப்போம், மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்குவதில்தான் தமிழ்நாட்டின் தொழில்வளம் பெருகுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு சிலருக்கு பொறாமை. பொய்களையும் அவதூறுகளையும் பரப்ப வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள். அவதூறு பரப்புபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய சரியான காலம் வந்துவிட்டது.
பெற்றோரை பதைபதைக்க வைத்த பொள்ளாச்சி கொடுமைதான் அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை மறக்க முடியுமா கஞ்சா, குட்கா, மாமுல் பட்டியலில் அமைச்சரும் டிஜிபியும் இருந்தது யார் ஆட்சியில்? தமிழ்நாட்டை பதற வைத்த பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக. கோடநாடு பங்களாவில் கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரங்கள். குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுத்தவர்கள் தான் இன்று உத்தமர் வேடம் போடுகின்றனர்.
மாமூல் வாங்கியவர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயரும், போலீஸ் டிஜிபி பெயரும் இருந்தது அதிமுக ஆட்சி. அந்த வழக்கு விசாரணையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விடாமல் தடுப்பவர்கள்தான் இன்றைக்கு உத்தமர்கள் போல பேசுகின்றனர்.
பாஜக தமிழகத்துக்கு கொண்டு வருகின்ற திட்டங்களை திமுக தடுக்கின்றது என்று பிரதமர் சொல்கிறார். அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை, நாங்கள் தடுக்கிறோமா. நீங்கள் ஒரு பழமொழி கேட்டிருப்பீர்கள், அண்ட புளுகு ஆகாசப் புளுகுனு சொல்லுவார்கள். அது மாதிரி, இது மோடி புளுகு. அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார்; நாம் தடுப்பதற்கு? எந்த திட்டத்துக்கு நாம் தடையாக இருந்தோம் என்று சொல்வாரா?. நான் ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 2014-ல் அறிவித்தார்கள். அப்போது யார் தமிழகத்தின் முதல்வர்? மறைந்த ஜெயலலிதா இருந்தார். அவர் தடுத்தாரா? இல்லையே.
10 ஆண்டுகால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஏதாவது நன்மை செய்ததா? கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை என கூறும் அதிமுக, கொங்கு பகுதிக்கு என்ன செய்தது?. பொள்ளாச்சி சம்பவத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று அப்போதே உறுதி அளித்திருந்தேன். மகள்களை பெற்ற அத்தனை பெற்றோரையும் பதற வைத்தது பொள்ளாச்சி சம்பவம். மறந்திட முடியுமா. பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்தவர்கள் தைரியமாக அதிமுக ஆட்சியில் வலம் வந்தார்கள். புகார் கொடுத்தவர்களை மிரட்டினார்கள். திமுக மகளிரணி சார்பில்தான், போராட்டம் நடத்தினார்கள். பிறகு, நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு நாடகம் போட்டார்கள். ஆனால், சாட்சிகள் மிரட்டப்படுகின்ற வேடிக்கையைப் பார்த்தார்கள்.
அடுத்து, உங்கள் நண்பர்கள் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் தடுத்தார்களா? இல்லையே. 2021-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம், நாங்கள் தடுத்தோமா?. இல்லை, தமிழக மக்கள்தான் தடுத்தார்களா? இல்லையே?. உங்களை யாரும் தடுக்கவில்லையே. ஆட்சியில் இருந்த பத்து வருஷமாக தமிழகம் மீது திரும்பி பார்க்காமல், தேர்தலுக்காக பத்து நாள் வந்து பொய் சொன்னால் தமிழக மக்கள் என்ன ஏமாளிகளா?
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கும் நிலையில, அந்தப் பெண்ணுடைய பெயரையும், முகவரியையும் வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி.
பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான் பாஜகவின் உயிர்மூச்சு. இனி இந்த பொய்களும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது! மாநிலத்தைக் கெடுத்த அதிமுக, மாநிலத்தை கண்டு கொள்ளாத பாஜக. அதிமுக, பாஜக மக்களை ஏமாற்ற பிரிந்தது போல் நடிக்கிறார்கள். இந்த கள்ளக்கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள்.” இதற்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க திமுக கூட்டணி உள்ளது.” என்றார் முதல்வர் ஸ்டாலின்.