திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுமக்களின் தலையில் மிளகாய் அரைத்து வரும் நகர்மன்ற உறுப்பினர்களின் தில்லாலங்கடி அயோக்கிய வேலைகள் குறித்தான சிறப்பு செய்தி இது..

கொடைக்கானலில் சுமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 20வது வார்டு தாழ்த்தப்பட்ட வார்டாக அறிவித்தது.இதில் பெண் வேட்பாளர்களாக அதிமுகவைச் சேர்ந்த பாத்திமா சாரா, திமுகவைச் சேர்ந்த பரிமளா, சுயேட்சை வேட்பாளராக விஜி, பா.ஜ.க.வைச் சேர்ந்த காந்திமதி, உள்ளிட்ட 6 பெண்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.

இதில் திமுகவைச் சேர்ந்த பரிமளா என்பவர் வெற்றி பெற்றார் என அறிவித்தனர்.ஒரு தேர்தல் நடைபெறும் போது தேர்தல் நடைபெறுவதற்கு முன் நுண்ணாய்வு நடைபெறும். இதில் வேட்பாளர்கள் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சோதனையிடுவது வழக்கம். ஆனால் கொடைக்கானல் நகராட்சியில் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் நுண்ணாய்வு நடைபெறவில்லை. இதை அப்போது தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்த நாராயணன் என்பவரும் நாராயண.. நாராயண.. என்று கண்டு கொள்ளவில்லை? ஏன் என்பது அவருக்கே வெளிச்சம்.

இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த பரிமளா பெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதே பகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட பழனியம்மாளின் கணவர் ராஜா, பரிமளா என்ன சாதி சான்றிதழ் கொடுத்துள்ளார் என வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டுள்ளார்.அப்போது பரிமளா பொய் சாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றது அம்பலமானது.பரிமளா போலி சாதிச் சான்றிதழ் வாங்கிய கதை கேளு.. கதை கேளு.. பரிமளாவின் உண்மையான பெயர் காசினாள் பரிமளா (கிறிஸ்தவர்) தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். இவர் தமிழக அரசு கெஜட்டில் தனது பெயரை பரிமளா என மாற்றம் செய்து தனது மகளின் பெயர் உள்ள இந்து தாழ்த்தப்பட்ட சான்றிதழை வைத்து தான் இந்து என சாதி சான்றிதழ் வாங்கியுள்ளார். அப்போது இருந்த கிராம நிர்வாக அலுவலரும் இதை கவனிக்காமல் பணத்தை லபக்கிக் கொண்டு? பல்லை இளித்தும் சான்றிதழ் கொடுத்துள்ளார். இந்த சான்றிதழையும் தேர்தல் நடத்திய அதிகாரியும் பார்த்தாரா அல்லது அவரும் பணத்திற்கு மயங்கினாரா என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்?

இந்த சம்பவம் குறித்து விசிக நகரச் செயலாளர் இன்பராஜ், திமுக நகர்மன்ற உறுப்பினர் பரிமளாவிடம் கேட்ட போது, தெரியாமல் தவறு செய்து விட்டேன் உங்கள் காலைப் பிடித்து கெஞ்சி கேட்கிறேன். நான் ராஜினாமா செய்து விடுகிறேன் என கெஞ்சியுள்ளார். (இந்த ஆடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது) ஆனால் இன்பராஜ் தனது சமூகத்திற்கு ஒதுக்கிய வார்டு உறுப்பினர் பதவியை நீங்கள் தில்லு முல்லு செய்து உங்களை ஆளுங்கட்சியினர் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர் என கேட்டுள்ளாா்.கொடைக்கானலில் ஏற்கனவே செண்பகனூர் பகுதியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த கோல்மால் சந்திரமோகன் குல்மால் வேலை பார்த்து பல லட்சங்களை தனது வார்டிலுள்ள திமுக பிரமுகர்களுடன் சேர்ந்து தனக்கும், தனது உறவினர்களுக்கும் உள்ள தோட்டத்திற்கு தடுப்புச் சுவர் அமைத்தும், பொதுக் குழாயிலிருந்து பைப் மூலம் தண்ணீரை திருடி சின்டெக்ஸ் டேங்கில் சேமித்து வைத்து விற்பனை செய்தும் மக்கள் பணத்தை ஒருபுறம் கொள்ளையடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது திமுக உறுப்பினர் பரிமளாவின் பிராடு பிளாஸ்பேக் வேறு காட்டுத்தீபோல் பரவி வருகிறது. இரண்டு திமுக உறுப்பினர்கள் செய்த லீலைகள் குறித்து கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதனிடம் கேட்டால் 24 வது வார்டு பொது மக்கள் சார்பில் புகார் மனு வந்துள்ளது. அதனடிப்படையில் 24வது வார்டில் என்னென்ன பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. அதில் என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளது என சீனியர் பொறியாளர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர் ஆய்வுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 20 வது வார்டு குறித்த பிரச்சனை எதுவும் எனக்கு தெரியாது. இந்த பிரச்சனை சம்மந்தமாக 20வது வார்டில் உள்ளாட்சித் தேர்தலில் நின்றவர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை. புகார் கொடுத்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கழுவுற மீனில் நழுவும் மீனைப்போல கூறியுள்ளார்.

இது குறித்து நகர்மன்றத் தலைவரிடம் கேட்ட போது சாதிச் சான்றிதழ் விவகாரம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தகவல் கேட்கப்பட்டுள்ளது என்றார். இதைவிடக் கொடுமை திமுக பிரமுகர் ஒருவர் திமுக இருக்கிறது நான் இருக்கிறேன் பயப்படாமல் இருங்கள் என பூஸ்ட் எனர்ஜி கொடுத்துள்ளார். அடுத்ததாக பெண் வார்டிற்காக ஒதுக்கப்பட்ட நகர முக்கிய வார்டை ஆண் வார்டாக மாற்றிய பித்தலாட்ட சம்பவம் தொடர்பான செய்திகள் விரைவில் வெளியிடப்படும். கொடைக்கானல் நகர்மன்ற ஊழல்கள் எபிசோட் போட்டு எழுதும் அளவிற்கு அவ்வளவு உள்ளது என்கின்றது நமது சோர்ஸ்கள்?

பழநி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான இ.பெ.செந்தில்குமார் மிகவும் சுறுசுறுப்போடு பணியாற்றுபவர். தன் தொகுதியில் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்நின்று தீர்த்துவைப்பார். எந்த உதவிகளை யார் கேட்டாலும் தயங்காது செய்து கொடுப்பார். இ.பெ.செந்தில்குமாருக்கென்று கொடைக்கானலிலும் தொகுதியிலும் நல்லபெயர் உள்ளது.

கடந்த 2011 இல் இ.பெ.செந்தில்குமார் பழநி சட்டமன்ற தேர்தலில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததற்கு காரணம் கொடைக்கானல் பகுதியில் திமுகவினரின் மீது மக்கள் கொண்டிருந்த அதிருப்தியின்மைதான். அதனால் தான் திமுகவிற்கு ஓட்டுக்கள் இங்கு எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது இதனால் அப்போதைய கொடைக்கானல் திமுகவினருக்கு இ.பெ.செந்தில்குமார் செம டோஸ் கொடுத்தார் என்பது கடந்த கால வரலாறு. இந்த நிலை நீடித்தால் கொடைக்கானல் பகுதியில் மக்கள் மத்தியில் திமுகவிற்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வாக்குவங்கியை கடுமையாக பாதிக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த பிரச்சனை தொடர்பாக இ.பெ.செந்தில்குமார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே, மேற்படி மக்கள் விரோதப்போக்கை கையாண்டு வரும் கவுன்சிலர்கள் மீதும், இதை கண்டுகொள்ளாமல் மெத்தனம் காட்டும் கொடைக்கானல் நகராட்சி நிர்வாகத்தின் மீதும் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு, மதுரை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.