தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வீட்டில் சிலிண்டர் மற்றும் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நாம் அப்பகுதியில் விசாரித்த போது, திருவேங்கடம் வட்டம், சாயமலை மஜாரா உட்பட்ட கொக்கு குளத்தில் அம்மையப்பன் மகன் சதீஸ்வரன் வயது 35. இவரது பூர்வீகம் சிவகாசி வட்டம் திருத்தாங்கனி கிராமமாகும். சதீஸ்வரன் சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் சுமார் 15 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கொக்கு குளம் ஊரைச் சேர்ந்த அரியத்தேவர் என்பவரது மகள் ராமலட்சுமியை திருமணம் செய்து பாண்டியலட்சுமி, தனலட்சுமி, தவமணி ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். சதீஸ்வரன் தனது மனைவியின் ஊரான கொக்கு குளத்தில் இரண்டு வருடங்களாக இருந்து வருகிறார்.
வரும் வெள்ளியன்று நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழா இப்பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற உள்ளது. அதில் வான வேடிக்கைக்காக சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வீட்டில் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சதீஸ்வரனுக்கு பட்டாசு தயாரிக்க தெரியும் என்பதால் சில பட்டாசு தயாரிக்கும் மருந்து பொருட்களையும் வீட்டில் வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.இன்று மார்ச்-03 காலையில் சதீஸ்வரனின் குழந்தைகள் 3 பேரும் விளையாட வெளியே சென்று விட்டனர். சதீஸ்வரன் மனைவி ராமலட்சுமி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்துள்ளது. சிலிண்டர் வெடித்தவுடன், சிவகாசியில் இருந்து வாங்கி வைத்திருந்த பட்டாசு மற்றும் பட்டாசு தயாரிக்க பயன்படும் வெடி மருந்துகளும் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தினால் சதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
சில தினம் முன்னர்தான், பெங்களூரில் வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து தென்காசி பகுதியில் வெடி விபத்து நடந்ததால் காவல்துறையினர் உசார் படுத்தப்பட்டு துரிதமாக செயல்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக அய்யாபுரம் காவல்துறைக்கும் சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர்.அதில் சதீஸ்வரன் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததை சேகரித்து பிரேதப் பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் சதீஸ்வரன் மனைவி ராமலட்சுமி காயமடைந்தார். காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா திருவேங்கடம், தாசில்தார் திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
நெல்லை தடவியல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இந்த வெடி விபத்து குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. நெல்லை தடவியல் துறை உதவி இயக்குனர் ஆனந்தி தனது குழுவினருடன் விரைந்து வந்து அப்பகுதியில் பட்டாசு மற்றும் வெடி மருத்து பொருட்களை சேகரித்து மேலும் வேறு ஏதும் பொருள்கள் இருக்கிறதா என்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.இந்த சம்பவத்தில் சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மேற்கூரை ஓடுகளும் சேதமடைந்துள்ளது. நல்லவேளையாக இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளி மாணவ, மாணவியர் யாரும் அப்பகுதியில் வரவில்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
-அட்சயன்.