திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து தனியார் பஸ் ஒன்று கொடைக்கானல் நோக்கி நேற்று (பிப்-16) காலை 11 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. டம்டம்பாறை கீழே பட்டப்பாறை அருகே சாலை வளைவில் டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது எதிரே கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு வந்த டிப்பர் லாரி அதிவேகமாக வந்துள்ளது. பஸ் மீது லாரி மோதினால் பலர் உயிரிழப்பர் என்ற அச்சத்தால், பஸ் பயணிகளை காப்பாற்றும் நோக்கில் பஸ்சை முடிந்தவரை இடதுபுறம் திருப்பி பிரேக் அடிக்க முயன்றுள்ளார் பஸ் டிரைவர். நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள தடுப்புச் சுவரை மோதி உடைத்தபடி, அந்தரத்தில் தொங்கியபடி பஸ் நின்றுள்ளது. இந்த விபத்தில் 15 போர் காயமடைந்தனர். முன் இருக்கையில் அமர்ந்திருந்த நித்யா (32) என்ற பெண்மணி, பஸ் டிரைவர் பிரேக் அடித்த வேகத்தில் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விட்டார். பள்ளத்தில் கிடந்த அவரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு, வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து இன்னும் ஒரு அடி நகர்ந்திருந்தால் கூட, 500 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். மற்ற பயணிகள் அனைவரும் நல்ல வேளையாக உயிர் பிழைத்தனர். இல்லையென்றால் பேருந்தில் பயணம் செய்தவர்களின் நிலை அதோகதிதான்.      

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து

விபத்தை ஏற்படுத்திய மணல் லாரி டிரைவரை பிடித்து, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். விபத்தை நேரில் பார்த்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கூறுகையில், டம்டம் பாறையில் இருந்து கீழ் நோக்கி, பைக்கில் வந்து கொண்டு இருந்தேன். மணல் லாரி அதிவேகமாக சென்று, முன்னால் சென்று கொண்டு இருந்த 2 கேரள சுற்றுலா பயணிகள் பஸ்களை ஓவர்டேக் செய்தது. அதே அசுர வேகத்தில் சென்று, எதிரே வந்த தனியார் பஸ் மீதும் மோதி விட்டது என்று கூறினார்.          

இது குறித்து கொடைக்கானலைச் சேர்ந்த செளந்தர் என்பவர் வாட்ஸ் அப்பில் தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார். வக்காளி டிப்பர் லாரி கூனா மானா டிரைவர் பயல்கள் ட்ரைவிங் அலப்பறைகளும் அத்து மீறல்களும் ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கு நாட்ல? மலைப் பகுதியிலாவது கொஞ்சம் பார்த்து பத்திரமா போகலாம் இல்லையா அதை செய்யவே மாட்டாங்க டிப்பர் லாரி டிரைவர்கள், அதுக்கு எல்லாம் டிரைவர்கள் மட்டும் காரணமல்ல? சில டிப்பர் லாரிகாரங்களும் அங்கங்க கல்லு மண்ணு திருடுறாங்க. போலீஸ் நடவடிக்கை எடுத்தா அரசியல்வாதி தலையிடுறாங்க போலீஸ் என்ன செய்ய முடியும்? 

டிப்பர் லாரி-தனியார் பேருந்து விபத்து நிகழ்ந்த இடம்

எனது பெயரை குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஒரு லாரி டிரைவர் கூறியதாவது.. லாரி ஓனர்கள் சீக்கிரமா லோடு இறக்கிட்டு வா சீக்கிரம் லோடு ஏத்த போ என்று, என்று எங்களை விரட்டுகிறார்கள். டிராபிக்காக உள்ளது லேட் ஆகும் என்று நாங்கள் சொன்னால்,  ஏய்… நீ பாட்டுக்கு வா! வர்றத நான் பாத்துக்கிறேன், இல்லைன்னா நீ வேலைக்ககு வராத என்று ஓனர்கள் சொல்கிறார்கள். கேஸ் ஆச்சுன்னா போலீசுக்கு பணம் கொடுத்து பார்த்துக்கலாம் என்கிறார்கள். நாங்கள் என்ன தான் செய்ய என்றார்..

போளூர் பழங்குடியினர் கிராம சபை தலைவர் சா.சோமசுப்பு என்பவர் வாட்ஸப்பில் கூறியுள்ளதாவது.. மேல்மலை மற்றும் கீழ்மலையில் உள்ள ஓட்டுநர்கள் மிகவும் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். ஏனென்றால் ஓட்டுநராகிய உங்களுக்கும் குடும்பம் உள்ளது உங்களை நம்பி பயணம் செய்கின்ற நபர்களுக்கும் குடும்பங்கள் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஐந்து நிமிடம் தாமதமாக சென்றாலும் பரவாயில்லை பேருந்தில் சென்ற பயணிகளின் எத்தனை லட்சியத்துடன் சென்று இருப்பார்கள் அவர்கள் லட்சியத்தை சிதைத்து விட்டீர்கள். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக தான் ஒரு அரசு பேருந்தை பதிவு செய்துள்ளோம் இப்போது தனியார் பேருந்து. ஓட்டுனர்களை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வருகின்றது. ஓட்டுனர்கள் ஒரு கடவுளாக பார்க்கப்படுகின்றார்கள். தயவுசெய்து ஓட்டுநர்கள் மிகவும் கவனத்துடன் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறைக்கு சம்பந்தமான அரசு அதிகாரிகள் ஓட்டுநர்களை கண்டித்தால் இதுபோன்று அசம்பாவிதம் நடக்காமல் இருக்கும்.

எது எப்படியோ மலைப் பகுதிகளில் 30−கி.மீ வேகத்திற்கு மேல் வாகனங்கள் செல்லக் கூடாது. ஆனால் கனரக வாகனங்கள், பிக் அப் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் கதா நாயகர்கள் மது அருந்தி விட்டும்,  செல்போன் பேசிக் கொண்டும், சிகரெட் பிடித்துக் கொண்டே செல்கின்றனர். இதனால் விபத்து அதிக அளவில் ஏற்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வத்தலக்குண்டு-கொடைக்கானல் −பழனி மலைச்சாலைகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வாகனங்களிலும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தியுள்ளதா என மோட்டார் வாகன அதிகாரிகள் ஆய்வு செய்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமீப காலமாக வத்தலக்குண்டு-கொடைக்கானல்−பழனி மலைச் சாலைகளில் டிப்பர் லாரிகளின் அசுர வேகம் பொது மக்களை அச்சுறுத்தி வருவது குறித்து மாவட்ட எஸ்பி கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.