திருப்பூர் மாவட்டத்தில் ரூ 1,172 கோடி மதிப்பில் நான்காம் குடிநீர் திட்டம், மாநாட்டு அரங்கம் மற்றும் மல்டி லெவல் பார்க்கிங் ஆகிய திட்டங்களை சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மைதான விழா மேடையில் வைத்து இன்று (பிப்-11) விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி துவக்கிவைத்தார். அதோடு, ஐந்தாயிரம் நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
மேலும், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், ஜோத்தம்பட்டி ஊராட்சி, அரியநாச்சி பாளையம் கிராமத்தை சேர்ந்த நெசவுத்தொழிலாளரான ச.சதீஷ்குமார் (வயது 30) த.பெ. சக்திவேல் என்பவர் சேலம் திமுக இளைஞரணி மாநாடுக்கு சென்று திரும்பி வரும் வழியில் சேலத்தை அடுத்து சங்ககிரி டோல்கேட் அருகில் இரவு 11 மணி அளவில் உணவு சாப்பிடுவதற்காக சாலையை கடக்க முயன்றபோது கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார். மறைந்த ச.சதீஷ்குமாருக்கு விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X வலைப்பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்.
இந்நிலையில், விபத்தில் இறந்த ச.சதீஸ்குமாரின் குடும்பத்தினரை நேரில் அழைத்து, திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பாக ரூபாய் 5 லட்சம் உதவித்தொகைக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு திமுக மாவட்ட செயலாளர் பத்மநாபன், மடத்துக்குளம் மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி, மெட்ராத்தி ஊராட்சிமன்ற தலைவர் தங்கராஜ் மற்றும் கழக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.