தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற கூட்டம் இனறு மாலை (பிப்-09) நகர்மன்ற தலைவர் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக கட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக திமுகவைச் சேர்ந்த சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டார். அப்போது அதிமுக நகர்மன்ற துணைத்தலைவர் கண்ணன் பல்வேறு திட்டங்களை முறையாக செய்யவில்லை எனவும் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை கூறிக் கொண்டிருந்த போது அதற்கு எம்எல்ஏ ராஜா எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு எதிர்ப்பான கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தார். இருப்பினும் தொடர்ந்து நகர்மன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவியிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது திடீரென குறுக்கிட்டு பேசிய எம்எல்ஏ ராஜா.. நகராட்சிக்குட்பட்ட பகுதியில் எலக்ட்ரிக் சுடுகாடு கட்டுவதை மதவாதத்தை கொண்டு சுடுகாட்டு பணிகளை நிறுத்திட்டாங்க, அதற்காக அதிமுக என்ன செய்தீங்க என எம்எல்ஏ ராஜா கேள்வி எழுப்பினார். சுடுகாடு கட்டக்கூடிய இடத்தில் கோவில் கிடையாது, அது மடம், பிள்ளையர் சிலை வைத்தால் கோவில் ஆகிடுமா, பிள்ளையார் சதூர்த்தி அன்று கூட சரக்குதான் அடிக்காங்க, எதுவுமே இல்லாத கற்சிலையை வைத்தால் கோவில் ஆகுமா மதத்தை பதிவு செய்து திட்டத்தை நிறைவேற்ற விடாம செய்தாங்க என எம்எல்ஏ ராஜா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நகர்மன்ற துணைத்தலைவர் கண்ணன் தலைமையிலான உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நகராட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தனர். பின்னர் வழக்கம்போல நகர்மன்ற கூட்டம் திமுக உறுப்பினர்களை கொண்டு நடத்தப்பட்டது.
அமைச்சர் உதயநிதியின் சனாதன சர்ச்சைப் பேச்சு சற்று அடங்கிய நிலையில் எம்எல்ஏ ராஜாவின் இந்த சர்ச்சைப்பேச்சு டிரெண்டிங் ஆகும்போல..