திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதி தமிழகத்தின் 12-வது வனவிலங்குகள் சரணாலயமாக உள்ளது. இந்த வனத்தில் 33 வகையான வனவிலங்குகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கொடைக்கானல் வனக்கோட்டத்தில் 1.கொடைக்கானல், 2.மன்னவனூர், 3.பூம்பாறை, 4.பேரிஜம், 5.பெரும்பள்ளம், 6.வடகவுஞ்சி, 7.வந்தரேவு என மொத்தமாக 7 வனச்சரகங்கள் உள்ளது. இந்த 7 வனச்சரகங்களும் கொடைக்கானல் வனவிலங்குகள் சரணாலயத்தில் இணக்கப்பட்டுள்ளன. இவ்வளவு வனவளம் வாய்ந்த பகுதியில்தான் வனத்துறை ஆசியுடன் மரக்கடத்தல் நடைபெற்று வருகிறது.மேற்கண்ட பசுமைச் செறிவான பகுதிகளில் பல்வேறு பழமையான மரங்கள் உள்ளன. வனங்களை தவிர தனிநபர் பட்டா நிலங்களில் உள்ள யூகாலிப்டஸ், தூதகத்தி, மலை வேம்பு, ஈட்டி, சந்தனம் போன்ற மரங்களை வெட்டி விற்க வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்ற பின்னரே தனிநபர்கள் தங்கள் நிலங்களில் உள்ள அனுமதிக்கப்பட்ட அளவு மரங்களை வெட்டிக்கொள்ள வேண்டும்.

கடத்தப்படும் மரம்

மேலும், இங்கு நடக்கும் பித்தலாட்டம் வேறாக உள்ளது. ஒரு சர்வே எண் கொண்ட நிலத்திலுள்ள மரங்களை வெட்ட அனுமதி பெற்று விட்டு, அனுமதி பெறாத மற்ற நிலங்களிலும் மரங்களை வெட்டிச்சாய்த்து காசாக்கி வருகின்றனர் மர வியாபாரிகள். மரங்கள் வெட்டுவதற்கு வருவாய்துறையும், வனத்துறையும் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, மரங்கள் வெட்டுவதற்கு உடனடியாக அனுமதி கிடைக்காது காலதாமதம் ஏற்படும் என்பதால், சில வனத்துறை அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு மரக்கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்சம் வாங்கிய பின்னர் நேர்மை எங்கிருந்து வரும் என்பதைப்போல வனத்துறை அதிகாரிகளும் கண்டும் காணமலும் உள்ளனர்.மரக்கன்றுகள் நடவு செய்து மாநிலத்தின் பசுமைக்கு வித்திடும் வகையில் வனத்துறையுடன் இணைந்து தனியார் அமைப்புகள் ஒருபுறம் செயல்படுகிறது என்றால் மறுபுறம் வனத்தைக் காக்க வேண்டிய வனத்துறையினரே லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு மரக்கடத்தலுக்கு துணை போகும் அசிங்கமும் அரங்கேறி வருகிறது.குறிப்பாக கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான வத்தலக்குண்டு வனச்சரகத்திற் குட்பட்ட தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கானக்காடு, பெரும்பாறை, மஞ்சல் பரப்பு, பெரும்பாறை, கேசிபட்டி, பாச்சலூர், குப்பம்மாள்பட்டி, கன்னிவாடி சரகத்திற்கு உட்பட்ட பன்றிமலை, ஆடலூர், சோளக்காடு போன்ற மலை கிராமங்களில் அனுமதியின்றி முறைகேடாக வெட்டும் மரங்களை தருமத்துப்படி சோதனைச்சாவடி வழியாக கொண்டு செல்கின்றனர்.

மரங்களை வெட்டிக் கடத்தி ஏற்றிக்கொண்டு லாரிகளில் ஓவர் லோடாக தினமும் பலமுறை மரங்களை ஏற்றிச் செல்கின்றார்கள். அதிகபாரம் ஏற்றுவதால் அப்பகுதியிலுள்ள தார்ச்சாலைகள் சேதமடைகின்றனது. அதேபோல் தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, தடியன் குடிசை, மஞ்சள் பரப்பு போன்ற இடைப்பட்ட பகுதிகளில் சாலையில் ஆங்காங்கே மரங்களை ரோட்டில் வெட்டிப் போட்டுள்ளது தற்போது தான் சற்று குறைந்துள்ளது என்கின்றனர்.  இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே பல முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு கொடுத்தும் அந்த புகார் மனுக்களை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை. மரக்கடத்தலை தடுக்காமல் தவறு செய்பவர்களுக்கு உடந்தையாக இருக்கும் வனத்துறை அதிகாரிகள் மீதும் முறையாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்

அதோடு, சித்தரேவு, காமக்காபட்டி, தருமத்துப்பட்டி ஆகிய செக்போஸ்ட்களில் உள்ள கண்காணிப்பு கேமரா முறையாக செயல்படுகிறதா என்று மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு செய்ய வேண்டும். சிசிடிவி கேமரா செயல்படுகிறதா இல்லையா என்று தெரியவில்லை அந்த அளவுக்கு மரக்கடத்தலை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்க காரணம் என்ன என்கின்றார் வேதனையுடன்.

இதுகுறித்து, தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் சுப்ரத் மஹோபத்ரா ஐஎப்எஸ், தீவிர விசாரணை மேற்கொண்டு மர வியாபரிகளோடு கைகோர்த்து வனங்களை சூரையாடி வரும் வனத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.