“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி அறிவித்தார்.
அதன்படி, முதலமைச்சர் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியில் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் ஐஏஎஸ் சாதிக் நகர் அங்கன்வாடி பள்ளிக்குச் சென்று மாணவ குழந்தைகளுக்கு முறையாக பாடம் நடத்தப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். வகுப்பறைகள், கழிப்பறைகள் போன்றவைகளில் சுகாதாரம் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்தார். பின்னர் மாணவ குழந்தைகளிடம் கலந்துரையாடினார்.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அதோடு, அவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி கிடைக்கின்றதா என்பதையும் திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகின்றனவா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றனவா என்பதையும் கேட்டறிந்ததார்.
இந்த முகாமில் ஆட்சியருடன் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.