மலைகளின் இளவரசியாம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விவசாய நிலங்களிலும், பாறைகளை உடைப்பதற்கும், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க கூடாது என கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. கொடைக்கானலில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கு மட்டும் அரசு பணிகளில் கிட்டாச்சி, பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.

செண்பனூர் பகுதியில் பெக்லைன் இயந்திரம் முறைகேடாக இயங்கி வருகிறது. (GPS map)

ஆனால் நாளடைவில் தடைசெய்யப்பட்ட இயந்திரங்கள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆசியோடு மலைப் பகுதிகளில் பொக்லைன், கிட்டாச்சி, போர்வெல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாறைகளையும் வெடி வைத்து உடைக்கப்பட்டு வருகின்றது.

பேர்வெல் வாகனம்

தற்போது கொடைக்கானலில் 30க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 5க்கும் மேற்பட்ட கிட்டாச்சிகள், பாறைகளை உடைக்கும் இயந்திரங்கள், போர்வெல் வாகனங்கள் கொடைக்கானல், வில்பட்டி, பிரகாசபுரம், அடிசரை, செண்பகனூர், நாயுடுபுரம், சின்னபள்ளம், பெரும்பள்ளம், வடகரைப்பாறை, தாண்டிக்குடி, மச்சூர், அட்டுவம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கனிமவளத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. எல்லாம் மாமூல் மயம் தான்?

முறைகேடாக இயங்கும் ஜேசிபி வாகனம்

தடை செய்யப்பட்ட இந்த வாகனங்கள் மூலம் பணிகள் நடைபெறுவதை கடந்த சில தினங்களுக்கு முன் இரண்டு செய்தியாளர்கள் படம் எடுத்துள்ளனர். அப்போது ஜேசிபி உரிமையாளர் மற்றும் சிலர் செய்தியாளர்களை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் வழக்கம் போல நடவடிக்கை எடுப்போம்… எடுப்போம்… எடுத்துக்கிட்டே இருக்கோம் என காவல்துறையினர் தனது பாணியில் சொல்கின்றனர்.

இதுவரை ஜேசிபி வைத்துள்ள நபர்களால் நான்கு நிருபர்கள் தாக்கப்பட்டு பாதிப்படைந்துள்ளனர். இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. ஜேசிபி, போர்வெல், கிட்டாச்சி, பாறைகளை வெடி வைத்து உடைப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வருவாயத்துறையினரிடம் முறையிட்டதின் பேரில் தாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம் வருவாய்த்துறை அதிகாரிகளின் கல்லாவை மட்டும் நிரப்புங்கள். நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

கனிமவளத்துறை இயக்குனர் பூஜாகுல்கர்னி ஐஏஎஸ்

அரசு விடுமுறை நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் அதிகாரிகள் யாரும் கொடைக்கானலில் டேரா போட்டு இருக்க மாட்டோம். அப்போது தங்களது பணிகளை மேற்கொள்ளுங்கள். இதை பத்திரிக்கையாளர்கள் யாராவது தடுத்தாலோ, போட்டோ, வீடியோ எடுத்தாலோ அவர்களை தாக்கிகூட விடுங்கள் புகார் எங்களிடம் தான் வரும் நாங்கள் உங்களை கைவிட மாட்டோம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தெம்பு கொடுத்துள்ளனர்.

இதனால் ஜேசிபி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கும் போது அதை படம் எடுக்கும் செய்தியாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை சட்டத்திலிருந்து தண்டிக்க முடியாமல் அதிகாரிகள் காப்பாற்றி வருகின்றனர்.

தொடர்ந்து இதே நிலை நீடித்தால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அண்மையில் இமயமலைப் பகுதி அருகே நிலச்சரிவு ஏற்பட்டு பல அடுக்குமாடிக் கட்டிடங்கள் பூமியில் புதைந்தது பல மனித உயிர்கள் பலியாகின. கொடைக்கானலிலும் இதே நிலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக அண்மையில் புவியியல், வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஐஏஎஸ்

எனவே அதிரடிக்கு பெயர்போன கனிம வளத்துறை இயக்குனர் பூஜா குல்கர்னி ஐஏஎஸ், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஐஏஎஸ் ஆகியோர் விழிப்புணர்வோடு செயல்பட்டு, மேற்படி GPS புகைபடங்களையே ஆதாரமாக வைத்து சம்மந்தப்பட்ட இடங்களில் உரிய விசாரணை மேற்கொண்டு, கொடைக்கானல் பகுதிகளில் செயல்பட்டு வரும் பொக்லைன் இயந்திரங்கள், கிட்டாச்சி, போர்வெல், பாறைகளை வெடிக்க வைக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மீதும் மேற்படி தவறுகளை கண்டுங்காணாமல் இருக்கும் அரசு அலுவலர்கள் மீதும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அண்டை மாநிலமான கேரளத்தில் ஒரு பிடி மண், ஒரு கல் கூட உரிய அனுமதியின்றி எடுக்க முடியாது. ஆனால் இங்கோ ஒரு எளவும் தேவையில்லை அதிகராமும் பணமும் இருந்தாலே போதும்? அரசு நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளுமா என பொறுத்திருந்து பார்ப்போம்?