கொடைக்கானல் சன் லயன்ஸ் கிளப் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மரக் கன்றுகள் நடவும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடைக்கானல் சன் லயன்ஸ் சங்க சேவைகள் குறித்து சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றும் கூட்டம் சன் லயன்ஸ் சங்க தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் தனியார் பங்களாவில் நடைபெற்றது.
சங்க செயலாளர் ராமலட்சுமி, பொருளாளர் பிச்சை, இணைச்செயலாளர் நாகராஜன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக 324பி முன்னாள் மாவட்ட ஆளுநரும், தற்போதைய கூட்டு மாவட்ட துணை தலைவருமான டாக்டர் டி.பி.ரவீந்திரன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்தக் கூட்டத்திற்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பேருந்து நிறுத்தம் ஒன்றில் நிழற்குடை அமைக்க அரசு ஒப்புதல் பெற்று அதற்கான பணிகளை விரைவாக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்து தீர்மானிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி முறையாக செயல்படுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் இனிப்புகள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழனி வத்தலக்குண்டு சாலையை இணைக்கும் முக்கிய இடத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் பெற்று வழிகாட்டி பெயர்ப்பலகை வைக்கவும், எதிர்வரும் கல்வி ஆண்டில் வறுமையில் வாடும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அவர்கள் இடைநில்லா கல்வி கற்க உதவும் விதமாக நிதி உதவி செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தமிழ்நாடு அரசுடன் இணைந்து உதவிகள் வழங்கும் விதமாக சர்வதேச லயன்ஸ் சங்கம் 58 லட்சத்து 37,000 ரூபாய் (70000 – USD) 324 கூட்டு மாவட்ட தலைமைக்கு வழங்கியுள்ளது. அதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் முன்னாள் மாவட்ட இணை பொருளாளர்” திரவியம் நன்றி உரையாற்றினார்.
இந் நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகளான அப்பாஸ், கிரன், ஆஷா ரவீந்திரன், செந்தில்குமார், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மரக் கன்றுகள் நடுவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.