கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நேற்று (24.12.2023) ரவுடிகளிடமிருந்து உயிருக்கு பாதுகாப்பு கோரியும் தங்களது வீட்டை திரும்ப மீட்டுக்கொடுக்கவும், கூலிப்படையினரை கைது செய்யவேண்டும் என ஐந்து குடும்பத்தை சேர்ந்தவர்கள் “கூலிப்படையினரை கைது செய்” என்ற பாதகைகளை கையிலேந்தி அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தார்கள்.
என்ன கொடைக்கானலில் கூலிப்படையா என விசாரணை செய்தோம்; திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் W 32 குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள நிலத்தில் குழந்தைராஜ் மற்றும் அவரது சகோதரர்கள் என ஐந்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயம் செய்து வசித்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் நிலம் மற்றும் வீடுகளின் மீது இவர்களுக்கும் – மற்றொருவருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இவர்கள் வீட்டிற்கு மூர்த்தி என்பவர் தன்னுடன் 25 க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் சென்று வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் என கூறி வீட்டிலிருந்த முதியவர்கள், குழந்தைகள், இளம் பெண்களை தாக்கி, வீட்டையும் சேதப்படுத்தி பொருட்களை சூறையாடியுள்ளனர். இந்த நிலம் சென்னையைச் சேர்ந்த ரமேஷ்க்கு சொந்தமான இடம் என்றும், அதனால் தான் ரமேஷ் இந்த ரவுடி மூர்த்தி கும்பலை ஏவிவிட்டுள்ளனர் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
இதனால் உயிருக்கு பயந்து குழந்தை ராஜ் உட்பட ஐந்து குடும்பத்தினர்கள் சுமார் 20 பேர் கொடைக்கானல் காவல் நிலையம் சென்று, வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஆனால் ரவுடிகள் எங்கள் குடும்பத்தினரை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். காவல்துறையினர் இரு தரப்பினரும் நில பத்திரங்களை எடுத்து வாருங்கள் என தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அலட்சியம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறுகிறார்கள்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைராஜ் மற்றும் 4 குடும்பத்தை சேர்ந்தவ 20 பேர்கள் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று நீதிகேட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதையறிந்த கோட்டாட்சியர் ராஜா சம்பவ இடத்திற்கு வந்தார். பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தினார். மேலும், காவல்துறையினரை அழைத்து பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் குடியேறியுள்ள கும்பலை வெளியேற்றி குழந்தைராஜ் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தங்க வைக்க வேண்டும். இருதரப்பினரும் நிலம் தொடர்பாக நீதிமன்றம் மூலமாக தீர்வு கண்டுகொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது இல்லத்திற்கு சென்றனர்.
இதுஒருபுறம் இருக்க, கொடைக்கானல் குறிஞ்சி நகர் பகுதிகளில் சமீப காலமாக மூர்த்தி என்ற ரவுடி 20க்கும் மேற்பட்ட அடியாட்களை வைத்துகொண்டு அப்பகுதியில் உள்ள அப்பாவி மக்களின் நிலங்களை மிரட்டி வருவதும், தாக்கி வருவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது என்கின்றனர். கொடைக்கானல் பகுதியை சேர்ந்த சீலன், பாலு, ஈஸ்வர் ஆகியோர்களின் நிலத்தையும் மூர்த்தி ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இப்பிரச்சனை தொடர்பாகவும் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும் இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையம், டி.எஸ்.பி அலுவலகம் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தாலும் வழக்கம் போல எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று சலித்துக்கொள்கிறார்கள்?
கொடைக்கானல், தாண்டிக்குடி, பூம்பாறை, பூண்டி, கிளாவரை, கூக்கால் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நிலம் வாங்குபவர்கள் மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும். ஒரு இடத்தை வாங்குவதற்கு முன்னர் நில ஆவணங்கள், கிராம ஆவணங்கள், வில்லங்கச் சான்றிதழ்கள், யாரிடம் அனுபவம் உள்ளது போன்றவற்றை தெரிந்துகொண்டே பின்னரே அந்த நிலத்தை வாங்க வேண்டும். கொடைக்கானல் பகுதிகளில் உள்ள ஒருசில நிலங்களுக்கு பத்திரம் ஒருவர் பெயரிலும், பட்டா ஒருவர் பெயரிலும், நில அனுபவம் ஒருவரிடமும் இருக்கிறது.
இம்மாதிரியான சொத்துக்களை விலைக்கு வாங்குவதால் தான் சிக்கல் எழுகின்றது. சம்மந்தப்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சில ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் புரோக்கர்களாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாகவும் மாறிவிடுகின்றனர். இவர்களின் வாயிலாகத்தான் மூர்த்தி போன்ற ரவுடிகளும் உருவாகின்றனர் என்கிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளின் செல்வாக்கால் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக்கொள்கின்றனர்.
இதுபோன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்தால் இயற்கையையும், அமைதியையும் அனுபவிக்க வரும் சுற்றுலாப்பயணிகளுக்கும், நிலத்தில் மூதலீடு செய்பவர்களுக்கும் பெரும் தொல்லையாக அமைந்துவிடும். எனவே, இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏ.பிரதீப் IPS கொடைக்கானல் பகுதிகளில் தலைதூக்கும் ரவுடியிசத்தை முளையிலேயே கிள்ளியெறிந்து முட்டுக்கட்டை போடவேண்டும். எஸ்பி நடவடிக்கை எடுப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்?