திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திற்கு உட்பட்ட சோழமாதேவி ஊராட்சியில் புல எண் 168-ல் உள்ள நிலத்தில் 5 சென்ட் இடம் மட்டுமே வக்போர்டு வாரியத்திற்கு  சொந்தமானது. மீதமுள்ள நிலங்களில் கே.எம்.எஸ் நகர் மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருக்கின்றது. 

இருப்பினும், புல எண் 168-ல் உள்ள முழு புலமும் தவறுதலாக பூஜ்ஜிய மதிப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. இந்த புல எண்ணிற்கு உட்பட்ட பகுதிகளில் நிலங்கள், மனைகள், வீடுகள் வைத்திருப்போர்கள் வாங்க, விற்க கிராம ஆவணங்களை பெறவும் சிக்கல் நீடித்து வந்தது.

இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

சி.மகேந்திரன் எம்எல்ஏ இதுதொடர்பாக தொடர் நடவடிக்கை மேற்கொண்டதால், புலஎண் 168-ல் உள்ள முழு புலத்திலும் மேற்கொள்ளப்பட்ட பூஜ்ஜிய மதிப்பு பதிவு நீக்கப்பட்டுள்ளது. 

தங்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியுள்ளதால் கே.எம்.எஸ். நகர் பகுதி மக்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சி.மகேந்திரன் எம்எல்ஏ-வை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.