மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் வார்டு அமைந்துள்ள பகுதி மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் வெற்றிபெற்ற வார்டு ஆகும். ஊரே நாறினாலும் மேயர் வெற்றிபெற்ற பகுதிகள் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பளீரென இருக்கும் என்பதற்கு நேர்மாறாக அடிப்படை வசதிகள் குறைவாக இருக்கின்றது மேயர் இந்திராணியின் வார்டு பகுதி என்கின்றனர்.
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சிந்தாமணி கிருதுமால் கால்வாயில் முன்பெல்லாம் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் தற்போது, இந்த கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் மண் மேடாகி அதில புல் புதர்மண்டி அலங்கோலமாக உள்ளது.
இந்த புதர்களில் பாம்பு, தேள் போன்ற விஷபூச்சிகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் ஊர்ந்து செல்வதால் குடியிருப்புவாசிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. தூர்வாரப்படாததால் மழைநீர், கழிவுநீர் முறையாக கால்வாயில் செல்ல முடியாமல் தெருக்களிலும் வீடுகளிலும் சென்று சுகாதார சீர்கேடுகள் உண்டாகிறது. இதனால் நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் கணேஷ்பாபு கூறுகையில், சிந்தாமணி கிருதுமால் கால்வாய் உடனடியாக தூர்வாரப்பட்டு சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கால்வாய்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் அகற்றிட வேண்டும். அதேபோல, ஆரப்பாளையம் மறவர் தெரு, மற்றும் பிள்ளைமார் தெரு, நடுத்தெரு, வேளார் தெரு போன்ற பல இடங்களில் ஏற்கனவே இருந்த பேவர் பிளாக் கற்கலை மாநகராட்சி நிர்வாகிகள் தோண்டிப்போட்டுவிட்டு 6 மாதத்திற்கும் மேலாகியும் இன்னும் மாநகராட்சி அதிகாரிகள் முறையாக அமைக்கப்படாமல் இன்றுவரை காலம் கடத்தி வருகின்றனார்கள்.
இதனால் சாலைகளில் பொது மக்கள் நடக்கவும் இரு சக்கரம் மற்றும் குப்பை வண்டி உட்பட நான்கு சக்கர வாகனங்களில் யாரும் தெருக்களில் செல்லமுடியவில்லை. அதேபோல ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் பொது மக்கள் செல்லும் சாலைகளில் கால்நடைகளை உலவ விடுவதால் அதன் சாணம், கழிவுநீர் பல இடங்களில் தேங்குகின்றது. இதானல் இப்பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது.
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளை மற்ற பகுதிகளில் பிடிப்பதுபோல் இங்குள்ள ஆடு,மாடுகளையும் உடனே மாநகராட்சி அதிகாரிகள் பிடிக்க வேண்டும்.மேலும், ஆரப்பாளையம் மந்தை திடல் பகுதியில் வகையில் போர்வெல் தண்ணீர் வசதி செய்து கொடுத்திடவேண்டும். மேயர் வார்டிலேயே இவ்வாறு மோசமாக இருந்தால் யார்தான் ஏற்றுக்கொள்வார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள்?
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஐஏஎஸ், மேற்படி மேயர் வார்டில் நிலவும் சுகாதாரக் குறைகளை களைவாரா?