வீடு கட்டித்தருவதாக கூறி ஒரு கோடியே எழுபது லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டதாக கூறி நடிகர் பாபி சிம்ஹா காவல்துறையில் புகாராளித்துள்ள சம்பவம் கொடைக்கானல் பகுதியில் மட்டுமல்ல சினிமாத்துறை வட்டாரத்திலும் பரபரப்பாகியுள்ளது. நடிகர் பாபி சிம்ஹாவுக்கு என்னதான் பிரச்சனை என விசராணை செய்தோம்…

நடிகர் பாபி சிம்ஹா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகர் என சுமார் நாற்பதுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சிம்ஹாவின் குடும்பம், ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் (தற்போதைய தொலுங்கானா) மோபிதேவியைச் சேர்ந்தது. ஆனால் அவர்கள் 1995 ஆம் ஆண்டிலேயே கொடைக்கானலுக்கு குடிபெயர்ந்து விட்டனர். கல்லூரிப் படிப்பை கோவையில் படித்தார்.  

நாளைய நட்சத்திரம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, இயக்குனர் சுந்தர்.சி, ராம்தாஸ் ஆகியோர் மூலமாக சினிமாத்துறையில் நுழைந்தார். ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று, பீசா, ஜிகர்தண்டா, சூதுகவ்வும், கோ-2 ஆகிய படங்களில் நடித்து திரையுலகில் படிப்படியாக முன்னேறியுள்ளார். இருப்பினும், இவரின் பெற்றோர்கள் இப்போதும் கொடைக்காலில் தான் வசித்து வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்– வட்டத்திலுள்ள வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் தன் குடும்பத்துக்கு சொந்தமான இடத்தில் பெற்றோர்களுக்கு வீடு கட்ட முடிவு செய்தார். வீடு கட்டுவதற்கு கொடைக்கானல் மூஞ்சிக்கல்லை சேர்ந்த ஜமீர் என்பவரிடம் கான்ட்ராக்ட் கொடுத்துள்ளார். ஜமீரின் மைத்துனரும், பாபி சிம்ஹாவின் பள்ளி நண்பருமான கொடைக்கானலை சேர்ந்த காதர் பாட்ஷா என்பவர் இந்த கான்ட்ராக்ட்-க்கு பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில், ஜுன் 1 ஆம் தேதி பாபி சிம்ஹா தனது புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார். எஞ்சியுள்ள வீட்டின் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு ஜமீர் மேலும் கூடுதலாக பணம் கேட்டு உள்ளார். இதற்கு பாபி சிம்ஹா, வீட்டின் பணிகளை முடித்தவுடன் பணம் தருவதாக கூறியுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு கான்ட்ராக்டர் ஜமீர் பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.

இதையடுத்து, கான்ட்ராக்டர் ஜமீர், பாபி சிம்ஹா தர வேண்டிய பல லட்சம் ரூபாய் பாக்கியை கேட்க தனது தந்தையையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். ஜமீரின் வயதான தந்தையை தகாத வார்த்தைகளால் பயன்படுத்தியதாகவும், அவமரியாதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாபி சிம்ஹா கொடைக்கானல் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ததன் பேரில் போலீசார் ஜமீர், அவரது தந்தை காசிம், உறவினர் உசேன், பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் மீது ஆகஸ்ட் 10ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், செண்பகனூர் பகுதியில் உள்ள காதர் பாட்ஷாவின் அண்ணன் உசேனுக்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு, ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி, பாபி சிம்ஹா, கேஜிஎஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜி, உள்ளிட்ட நான்கு பேர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களுடன் சென்றனர்.  உசேன் இந்த விசயத்தில் தொடர்ந்து தலையிட்டால், உடல் ரீதியாக தீங்கு விளைவிப்பதாக அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்களது செயல்கள் விடுதி ஊழியர்களை மிரட்டும் அளவிற்கு நீட்டிக்கப்பட்டு, இடையூறு ஏற்படுத்தியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜியிடம் முறைப்படி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பாபி சிம்ஹா, ராமச்சந்திர ராஜி உள்பட அடையாளம் தெரியாத 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக இரு தரப்பிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகிறது காவல்துறை.

வில்பட்டி உள்ளாட்சி நிர்வாகம் 2500 சதுரடிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. பாபி சிம்ஹா தனது செல்வாக்கை பயன்படுத்தி அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட கூடுதலாக கட்டுமானம் செய்துள்ளார் என்கின்றது ஜமீர் தரப்பு. கட்டுமானப் பொறியாளருக்குத்தானே கட்டிட விதிகள் தெரியும். அதன்படி தானே கட்டவேண்டும். எங்களுக்கு என்ன தெரியும். என்கின்றது பாபி சிம்ஹா தரப்பு. பாபி சிம்ஹா தரப்பு பணம் கொடுத்துவிட்டதாக கூறுகிறது. ஜமீர் தரப்பு பணம் இன்னும் கொடுக்க வேண்டும் என்கின்றது.  

வீடு சினிமா செட்டிங் போல இருக்கிறது. இதனுடைய பேஸ்மென்ட் முதல் அனைத்துப் பணிகளும் தரமற்ற நிலையில் உள்ளது. வேறு ஒரு பொறியாளரை கொண்டு ஆய்வு செய்தேன். அவர் இந்த வீடு எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும் என கூறினார். என்னை ஏமாற்றி பணத்தை பெற்றதோடு, நான் போலி பட்டா வைத்து விதிமுறை மீறி வீடு கட்டியதாக என் மீதே குற்றம் சாட்டுகின்றனர். மின்சார இணைப்பு இல்லை என்றும் கூறுகின்றனர். வீடு கட்ட ஒப்பந்தம் பெற்றவர்தான் விதிமுறைகளுக்குட்பட்டு கட்டிடங்களை கட்டவேண்டும். இங்கு 30 ஆண்டுகளாக வசித்து வரும் எனக்கே கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். என் போன்றவர்களுக்கே இப்படி ஒரு நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும். என்னை ஏமாற்றியவர்கள் மீது நீதிமன்றம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் பாபி சிம்ஹா.

கான்ட்ராக்ட்டர் ஜமீர் தரப்பில் கூறியதாவது, 2500 சதுரடிக்கு கட்டிட அனுமதி பெற்று, 5500 சதுரடி கட்ட ஒப்பந்தம் போட்டுக்கொண்டோம். ஆனால் பணிகளை விரிவுபடுத்தி தற்போது 9500 சதுடிகள் வந்துவிட்டது. மிகவும் உறுதியாகவே கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. தரத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லை. தரம் குறைவென்றால் ஜுன் மாதம் கிரகப்பிரவேசம் செய்த போதே சொல்லியிருக்கலாம். பாபி சிம்ஹாவின் பெற்றேர்கள் தினமும் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு வந்துவிடுவார்கள். அன்றாடம் நடக்கும் பணிகளை பார்வையிடுவார்கள். பாபி சிம்ஹாவிடம் எனக்கு தரவேண்டி மீதி பணத்தை கேட்டதால்தான் பிரச்சனையே என்கின்றனர். பாபி சிம்ஹா கட்டுமானத்திற்கு ஜமீரிடம் எவ்வளவு தொகை கொடுத்தார் என்பதும், ஜமீர் எவ்வளவு தொகை பாபி சிம்ஹாவிடம் கட்டுமானத்திற்காக இதுவரை பெற்றுக்கொண்டார் என்பதை இருதரப்புேம ஆதாரத்தோடும், வெளிப்படையாகவும் கூறவில்லை. அதன் மர்மம் என்ன என்பதுதான் தெரியவில்லை?

பாபி சிம்ஹா நடிகர் என்பதால் கட்டிட விதிமீறல் என்பதைப் போன்ற பல விதிகள் பேசுபொருளாகியுள்ளது. ஆனால் உண்மையிலேயே கொடைக்கானல் முழுவதுமே அதேபோன்ற கட்டிடங்கள் விதிமீறல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வில்பட்டி ஊராட்சியில் பாபி சிம்ஹாவின் வீடு கட்டுமானத்திற்கு 2500 சதுரடிகளுக்கு மட்டுமே கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டுமானம் சுமார் 9000 சதுரடிகளுக்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. மூன்று மடங்குகள் அதிகம். கொடைக்கானல் பகுதியில் வீடுகள் கட்டுவதற்கும், வணிகம் சார்ந்த கட்டிடங்கள் கட்டுவதற்கும் மலைப்பகுதி மேம்பாட்டு துறையின் சார்பில் உள்ளடக்கிய பல்வேறு அரசு துறைகளில் அனுமதி பெற்று கட்ட வேண்டும். அதோடு, மலைப்பகுதியில் சுமார் 7 மீட்டருக்கு மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்பது விதி.  

கொடைக்கானல் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அனுமதியற்ற வணிக கட்டிடங்கள், தங்கும் விடுதிகள், மனை இடங்கள் என ஏராளமாய் பெருகி கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதியே கான்கிரீட் காடுகளாக மாறி வருகிறது.இங்கு நடக்கும் வணிகவளாகம், லாட்ஜ்கள், ரிசார்ட்டுகள், பங்களாக்கள் உள்ளிட்ட பெரிய கட்டுமானத்திற்கு மலைப்பகுதியில் இராட்சத இயந்திரமான ஜேசிபி வைத்து பாறைகளை உடைத்தும்,வெடிமருந்துகள் பயன்படுத்தி கற்கலையும் உடைத்துள்ளனர்.கனரக இயந்திரங்களை பயன்படுத்தவும்,வெடிமருந்துகளை பயன்படுத்தவும் அனுமதி இல்லை.ஆனால் சுமார் 20க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனம் கொடைக்கானலில் உள்ளாட்சி  நிர்வாகங்களின் மாமூல் ஆசியோடு இயங்கி வருகிறது என்கின்றனர்.

கொடைக்கானல் நகராட்சி நிர்வாகமும், கொடைக்கானலை சுற்றியுள்ள உள்ளாட்சி நிர்வாகங்களும் எதையும் கண்டுகொள்ளாமல் வாய்மொழியாக அனுமதி வழங்கி வணிக வளாகங்களை மற்றும் தங்கும் விடுதிகளை கட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொள்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி இஆப, விதிகளை மீறிய பாபி சிம்ஹா வீட்டு விவகாரத்தை ஒரு முன்மாதிரியாகவும், ஆதாரமாகவும் கொண்டு, முறையாக கண்காணிக்கத் தவறிய வில்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டும், கொடைக்கானல் நகரப் பகுதிகளில் விதிகளை மீறியுள்ள கட்டிடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மலைகளின் இளவரசி விரைவில் மறித்து விடுவாள்.

-மலையரசன்.