உலக அளவில் பொருளாதாரத்தில் சிறப்பாகச் செயலாற்றும் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதிஅரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என 20 நாடுகள் இணைந்து ஜி-20 என்ற பெயரில் பொருளியல் கூட்டமைப்பு உருவாக்கிப் பணியாற்றி வருகின்றன. ஜி-20 பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85 சதவிகதமும், உலக வணிகத்தில் 80 சதவிகதமும், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது.

இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஒவ்வொர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான மாநாடு “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற தலைப்பில் இந்தியாவின் தலைமையில் கடந்த 09.09.2023 மற்றும் 10.09.2023 அன்று தலைநகர் டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி-20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க யூனியன் இணைந்ததன் மூலம் ஜி-20 அமைப்பு இனி ஜி-21 அமைப்பாக மாறுகிறது.

இந்தியப் பிரதமர் மோடி ஜி-20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒடிசாவின் கோனார்க் சக்கரத்தின் முன்பு நின்று மாநாட்டில் பங்கேற்க வந்த உலகத் தலைவர்களை வரவேற்றார். அதில் “இந்தியா” என்று பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜி-20 மாநாட்டில் நாட்டின் தலைவர்கள் முன்பு இருந்த பெயர்ப் பலகையில், பிரதமர் மோடியின் முன் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் “பாரத்” என்றும், மாநாட்டை முன்னிட்டு 09.09.2023 அன்று குடியரசுத் தலைவர் அளித்த சிறப்பு இரவு விருந்து அழைப்பிதழில் ‘President of India’ என்று எழுதாமல், ‘President of Bharat’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையையும், பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

இந்தியாவை பாரத் என பெயர் மாற்றம் செய்ய இருக்கின்றதா மத்திய அரசு? ஏன் எதற்காக இந்த திடீர் பெயர் மாற்றம்? பெயர் மாற்றி என்ன பயன் என்று எதிர்க்கட்சிகள் விலாசுகின்றன. சில இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்களும், சினிமா நட்சத்திரங்களும், பலதுறை பிரபலங்களும் பெயர் மாற்றத்திற்கு தங்கள் கண்டனத்தை வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும், பாரத் என பெயர் மாற்றத்திற்கு வரவேற்கும் விதமாக பாஜகவைச் சேர்ந்த மாநில முதல்வர்களும், ஆளுநர்களும், மத்திய அமைச்சர்களும், இந்தி நடிகர் அமிதாப்பச்சன், அக்ஷய் குமார் உள்ளிட்ட சில பிரபலங்களும் வரவேற்றுள்ளனர். ஆக “பாரத்” பெயருக்கு வடக்கில் ஆதரவும், தெற்கில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

“இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியா, பாரதம் என இரண்டு பெயர்களும் உள்ளன. அரசியல் நிர்ணய சபையில் இந்த விஷயம் விவாதத்துக்கு வந்தபோது, ‘பாரத்’ என்பதையே வைக்க வேண்டும் என்று சிலர் வாதிட, ‘இந்தியா என்பதுதான் எல்லோருக்கும் தெரியும். அதையே வையுங்கள் என்று ஜவஹர்லால் நேருவும், அம்பேத்கரும்” கூறி அதற்கோர் முற்றுப்புள்ளி வைத்தனர் என்பது பழைய வரலாறு.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைக்கவும், பாஜகவை தோற்கடிக்கும் வகையில், காங்கிரஸ் தலைமையில் 26 எதிர்க்கட்சிகள் இணைந்த கூட்டணிக்கு ‘I.N.D.I.A’ (இந்தியா) என்ற பெயர் சூட்டப்பட்டது. ‘I.N.D.I.A’ இதன் விரிவாக்கம்: I – Indian, N – National, D – Democratic, I – Inclusive, A – Alliance. அதாவது, இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி ஆகும்.

“இந்திய நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது. எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமல்ல,” எதிர்கட்சிகள் கூட்டணிக்கு ‘I.N.D.I.A’ என பெயரிட்டுள்ளது. அதன் பெயரை ‘பாரத்’ என்று மாற்றினால், பின்னர் மீண்டும் பா.ஜ.க நாட்டின் பெயரை மாற்றுமா? அல்லது பி.ஜே.பி. என்று வைக்குமா? “இது என்ன நகைச்சுவை? நமது நாடு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது, ‘I.N.D.I.A’ கூட்டணி உருவானதால் தான் அதன் பெயர் மாற்றப்படுகிறது. இப்படிச் செய்வதால் ‘I.N.D.I.A’ கூட்டணிக்குச் சில வாக்குகள் பறிபோகும் என பா.ஜ.க. நினைக்கிறது. இது நாட்டுக்கு எதிரான துரோகம்,” என்று தில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் காட்டமாக கூறியுள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா, பாரத் ஆகிய இரண்டு சொற்களுமே உள்ளன. அதனால் எங்களுக்கு அந்த இரண்டு சொற்களின் பயன்பாட்டிலுமே எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு INDIA என்று பெயர் சூட்டப்பட்டதால் தான் பாஜகவுக்கு இந்தியா என்ற பெயர் எரிச்சலூட்டுகிறது. அதனாலேயே அவர்கள் பெயரை மாற்ற முற்படுகிறார்கள். இந்தியாவின் ஆன்மாவை சிதைக்க நினைப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட ஜி-20 மாநாட்டில், மாநாட்டுக்கு தலைமை தாங்கும் நாட்டின் பெயரை ‘இந்தியா’ என்றும் ‘பாரத்’ என்றும் இரு வேறு விதமாகக் குறிப்பிட்டிருந்தது மிகத் தவறான முன்னுதாரணம் ஆகும். கடந்த 10 வருடங்களாக இந்தியாவை பாரத் என அழைக்காமல், எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு INDIA என பெயரிட்டவுடன், இந்தியாவிற்கு-பாரத் என உள்நோக்கத்தோடு பெயர் மாற்றி அழைப்பதை எந்தவொரு உண்மையான இந்தியனும் தேசபக்தியோடு ஏற்றுக்கொள்ள மாட்டர்கள் என்பதே நிதர்சனம்.

-சேனா.