தமிழகத்தில் கோவை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக தொழில் துறையில் உலக அளவில் கொடிகட்டிப் பறப்பது திருப்பூர் மாவட்டம் ஆகும். இங்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொழில் வாய்ப்பை வாரி வழங்கி வருகிறது.

திருப்பூர் மாவட்ட காவல்துறை மாநகர், புறநகர் என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. புறநகர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை என ஐந்து சப்-டிவிஷன்களை உள்ளடக்கி ஸ்டேஷன்கள் இயங்கி வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு மாநிலத்தவர்கள் பணியாற்றி வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த நிலையை சீராக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் ஐபிஎஸ் தொடர்ந்து முழு முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.

அதிக தொழில் உள்ள மாவட்டம் என்பதால் இங்கு சமூக விரோதிகள் கள்ளச்சாராயம், கள்ள மது, கஞ்சா விற்பனை, கள்ள லாட்டரி, பிராத்தல், குட்கா பொருட்கள் விற்பனை, போலி லாட்டரி சீட்டு விற்பனை, சூதாட்ட விடுதிகள் என சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாகவும், இதுபோன்ற மற்றும் இன்னும் பிற அசாம்பாவிதங்களை தடுக்கும் நோக்கத்திலும், பொதுமக்கள் போலீசார் இடையே நல்லுறவு ஏற்படும் வகையிலும், ‘வில்லேஜ் விஜிலென்ஸ் போலீஸ்’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியுள்ளார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் ஐபிஎஸ்.

சட்ட விரோதமான செயல்களை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர சாமிநாதன் ஐபிஎஸ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு விசிட் செய்தும், சட்ட விரோத கும்பல்களை உடனடியாக பிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் மாவட்டத்தில் கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்பவர்களையும் எவ்வித சமரசமின்றி கைது செய்வதால், குற்றவாளிகள் வாலைச் சுருட்டிக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் நால்வர் கொலை வழக்கில் அதிவிரைவாக நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தற்போது வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும், காங்கேயம் அடுத்த சாவடிபாளையத்தை சேர்ந்த ஆயில் மில் உரிமையாளரான குணசேகர் என்பவர் வீட்டில் கடந்த மாதம் 7 கொள்ளையர்கள் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகைகள்,13 லட்சம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் ஆகியவைகளை பறித்து கொண்டு குடும்பத்தினரை கட்டிப்போட்டு தப்பிச்சென்றனர்.

இதையடுத்து எஸ்பி சாமிநாதன் சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, குற்றவாளிகளை விரைவாக கைதுசெய்ய நான்கு தனிப்படைகள்
அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையின் காரணமாக மூன்றே நாட்களில் தொடர்புடைய குற்றவாளிகள் 10 பேர்களை மடக்கிப் பிடித்தனர். அதோடு, குற்றவாளிகளிடமிருந்து 16 பவுன் தங்க நகை, ரூபாய் 10 லட்சம் மற்றும் 3 செல்போன்கள் கொள்ளையடிக்க பயன்படுத்திய மஹிந்திரா மற்றும் சைலோ கார், கத்திகளை பறிமுதல் செய்தனர்.

காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு எடுப்பதற்கும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் ஆலோசனைகள் கூறி சட்டம் ஒழுங்கை சமன் செய்தும், பிற வகுப்பினர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி வருகிறார்.

சாமிநாதன் ஐபிஎஸ் அதிரடி தொடர் நடவடிக்கையால் திருப்பூர் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை சீராகி வருகிறது. இவர் பொறுப்பற்ற பின்னர் தீர்வு காணப்படாமல் நிலுவையில் இருந்த வழக்குகள், கொள்ளை வழக்குகள் போன்றவைகள் தீர்வுகள் காணப்பட்டு வருகிறது. அதோடு, சட்டத்திற்கு புறம்பான தொழில்கள், செயல்கள் ஒழிக்கப்பட்டு வருவதால் பொதுமக்களிடம் மகிழ்ச்சி ஏற்பட்டு வருகிறது.

குற்றவாளிகள் இல்லாத சமூகம் தான் மாவட்ட வளர்ச்சிக்கான அச்சாணி என்பதை மனதில் வைத்து பணியாற்றி வரும் சாமிநாதன் ஐபிஎஸ்-ன் அதிரடிகள் தொடரட்டும்!

-அ.முக்தார்.