நாமக்கல் அருகே சிலுவம்பட்டி என்ற கிராமத்தில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.82 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மாற்றி மோசடி செய்த புகாரில், அதிமுக முன்னாள் எம் எல் ஏ பொன்.சரஸ்வதியின் கணவர் கைது செய்யப்பட்டார். முன்னாள் எம்எல்ஏவின் கணவர் போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரப்பதிவு செய்யதை எப்படி போலீசார் கண்டுபிடித்தார்கள் என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

நாமக்கல் அருகே உள்ள சிலுவம்பட்டியை சேர்ந்த 72 வயதாகும் எட்டிக்கண் என்பவர் காதப்பள்ளி கிராமத்தில் உள்ள தனது 5.82 ஏக்கர் நிலத்தை திருச்செங்கோடு சீத்தாராம்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரது மனைவி சாந்தி பெயருக்கு ‘பவர் ஆப் அட்டர்னி’ எழுதி கொடுத்திருக்கிறார்.
இதில் சாந்தி 5.82 ஏக்கரில், 8,400 சதுரஅடி நிலத்தை திருச்செங்கோடு அ தி மு க முன்னாள் எம் எல் ஏ பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமிக்கு விற்றுள்ளார். பின்னர் சில மாதங்களில் சாந்தி இறந்துவிட்டார். இதையடுத்து அவரது பெயரில் எட்டிக்கண் எழுதி கொடுத்த ‘பவர் ஆப் அட்டர்னி’ ரத்தாகி விட்டது. இதன்மூலம் மீண்டும் எட்டிக்கண் பெயருக்கு 5.82 ஏக்கர் நிலமும் வந்துவிடும். ஆனால் அந்த நிலத்தை முன்னாள் எம் எல் ஏவின் கணவர் பொன்னுசாமி, உண்மையான நில உரிமையாளர்களின் புகைப்படத்தை மாற்றி, ஆள்மாறாட்டம் செய்து, புதிதாக ‘பவர் ஆப் அட்டர்னி’ தயாரித்து நாமக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறார். சிலுவம்பட்டி கிராமத்தில் உள்ள இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ,50 கோடி என்று கூறப்படுகிறது. அந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து, நாமக்கல் மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்திலும் பதிவு செய்து பொன்னுசாமி டி.டி.சி.பி. உரிமமும் பெற்றுள்ளார். இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் எட்டிக்கண், அவரது மகன் வேலுசாமி ஆகியோருக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த எட்டிக்கண், அவரது மகன் வேலுசாமி ஆகியோர், போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் எட்டிக்கண், அவரது மகன் வேலுசாமி ஆகியோர் புகார் அளித்தார்கள். அதன்பேரில் முன்னாள் எம் எல் ஏவின் கணவர் பொன்னுசாமி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.. இந்தநிலையில், திருப்பூரில் தலைமறைவான இருந்த முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தார்கள்.