இந்தியாவில் இனி சுங்க கட்டணம் செலுத்துவதற்கும் வருடாந்திர பாஸ்களை வழங்குவதற்கும் மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. தற்போது இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் எல்லாம் பாஸ்டேக் முறையில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சில இடங்களில் சுங்க கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அருகருகிலேயே சுங்கச்சாவடிகள் இருப்பதாகவும் மக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அடிக்கடி சுங்கச்சாவடிகள் வழியே பயணம் செய்பவர்களுக்கும் வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி தனிநபர் வாகன உரிமையாளர்கள் 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டு ஓராண்டுக்கான டோல் பாஸை பெற்றுக் கொள்ளலாம் .

அந்த குறிப்பிட்ட ஓராண்டு காலத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் நாட்டின் எந்த ஒரு சுங்கச்சாவடியிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல கார் உரிமையாளர்கள் 15 ஆண்டு காலத்திற்கு என மொத்தமாக 30 ஆயிரம் ரூபாயை கட்டணமாக செலுத்திவிட்டு லைஃப் டைம் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான ஆலோசனைகள் தொடக்க நிலையில் இருப்பதாக சாலை போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைக்கு சுங்கச்சாவடிகளில் மாதாந்திர பாஸ் வழங்கப்படுகிறது. ஒரே சுங்கச்சாவடியில் அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருப்பவர்கள் , தினம் தோறும் அந்த சுங்கச்சாவடியை கடந்து செல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இதுபோன்ற பாஸை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மாதம் 340 ரூபாயும், ஆண்டுக்கு 4050 ரூபாயும் செலவாகிறது . இந்த நிலையில் தான் 3000 ரூபாய்க்கு ஒரு ஆண்டுக்கான பாஸை கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த ஒரு சுங்கச்சாவடியிலும் இந்த பாஸை பயன்படுத்திக் கொண்டு பயணம் செய்ய முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, கார் உரிமையாளர்களுக்கு சுங்க கட்டண செலவை குறைப்பதற்காக அரசு பாஸ் நடைமுறையை கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருப்பதாக கூறினார். இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் 55,000 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் 8,000 கோடி ரூபாய் தனிநபர் வாகன உரிமையாளர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் பாஸ்டேக் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளில் 53 சதவீதம் தனிநபர் வாகனங்களில் தான் நடக்கிறது. ஆனால் இவ்வாறு வசூல் செய்யப்பட்ட மொத்த தொகையில் 21 சதவீதம் மட்டுமே தனி நபர் வாகனங்களில் இருந்து பெறப்படுகிறது. மேலும் இதுபோன்ற தனிநபர் வாகனங்கள் பெரும்பாலும் காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிக்குள்தான் சுங்கச்சாவடிகளை கடக்கின்றன. இவ்வாறு ஓராண்டு மற்றும் 15 ஆண்டுகளுக்கான பாஸ்களை வழங்குவதன் மூலம் அரசுக்கு எந்த ஒரு இழப்பீடும் ஏற்படாது என அதிகாரிகள் கூறுகின்றனர்.