சொத்துக்களை நிர்வகிக்கும் வக்பு வாரியங்களின் அதிகாரத்தில் திருத்தம் செய்வது, பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிப்பது உட்பட, வக்பு சட்டத்தில் 40 திருத்தங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரில் இது தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாத்தின்படி, மதம் மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காக கடவுளின் பெயரில் சொத்துக்களை தானமாக வழங்குவதே, வக்பு என்று அழைக்கப்படுகிறது. இதன்படி, எந்த ஒரு அசையும் அல்லது அசையா சொத்துக்களை, இந்த பணிகளுக்காக நன்கொடையாக வழங்கலாம். இதன் வாயிலாக வழங்கப்படும் நிலங்களில் கிடைக்கும் வருவாய், பள்ளி வாசல், தர்காக்கள், கல்வி மேம்பாடு உட்பட பல பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.தானமாக வழங்கப்பட்ட பின், அதன் மீது, தானமாக வழங்கியவரின் குடும்பத்தில் உள்ள எவரும் எதிர்காலத்தில் உரிமை கோர முடியாது. இது போன்ற தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை பராமரிக்க, 1954ம் ஆண்டில் வக்பு வாரிய சட்டம் இயற்றப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2013ல் பல மாற்றங்களை செய்தது.

மத்திய சிறுபான்மை நலத்துறை கிரண் ராஜு

இதன்படி, புதிய சட்டம் அமலுக்கு வந்தது. வக்பு வாரிய சட்டத்தின்படி, மாநில அளவில் வக்பு வாரியங்களும், தேசிய அளவில் வக்பு கவுன்சிலும் அதன் செயல்பாடுகளை கவனித்து வருகின்றன. சொத்துக்களுக்கு உரிமை கோருதல், அதன் மீது மேல்முறையீடு செய்வது என, பல பிரச்னைகள் சமீபகாலமாக எழுந்துள்ளன. மேலும், பல சொத்துக்களை வக்பு சொத்துக்களாக அறிவித்து உரிமை கோருவதாகவும் புகார்கள் எழுந்தன.தமிழகத்தில் வேலுார், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சொத்துக்கள் அபகரிக்கப்படுவதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இதுபோல, நாட்டின் பல பகுதிகளில் பிரச்னை உள்ளது. டில்லியில் மட்டும் 198 புகார்கள் உள்ளன. இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 40 திருத்தங்கள் வரை செய்யப்பட்டுள்ளன. இதற்கான மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. வரும் நாட்களில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் சொத்துக்களுக்கு உரிமை கோரும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவது, மத்திய மற்றும் மாநில வக்பு வாரியங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அளிப்பது உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வக்பு வாரியங்கள், சொத்துக்கு உரிமை கோரும்போது, அதை ஆய்வு செய்து உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது. அதுபோல, வக்பு வாரியங்களின் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலங்கள் தொடர்பாகவும் ஆய்வுகள் நடத்துவது கட்டாயமாக்கப்பட உள்ளது.குறிப்பாக, வக்பு வாரியத்தில் உள்ள அனைத்து சொத்துக்களையும், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் முன்னிலையில் முறைப்படி பதிவு செய்து, அந்த விபரங்களை வக்பு வாரிய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற திருத்தமும் இதில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது நாடு முழுதும், 3-0 வக்பு வாரியங்கள் உள்ளன. புள்ளி விபரங்களின்படி, தற்போது நாடு முழுதும், 9.40 லட்சம் ஏக்கர் அளவுக்கு, 8.70 லட்சம் சொத்துக்கள், வக்பு வாரியங்களிடம் உள்ளன. இவற்றின் வாயிலாக, ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது மிகவும் குறைத்து காட்டப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதையடுத்து, வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும், அதன் கட்டுக்கடங்காத அதிகாரத்தை ஒழுங்குபடுத்தும் வகையிலும், பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையிலும், வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.