கவிஞர், பத்திரிகையாளர், பெண்ணிலக்கியவாதி என பல பரிணாமங்களைக் கொண்டவர் தான் மறைந்த முதல்வர் கருணாநிதியின் மகளும், இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி எம்பி. தற்போது தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மீண்டும் போட்டியிடுவதால் தேர்தல் களம் நட்சத்திர அந்தஸ்து பெற்று களைகட்டியுள்ளது. கனிமொழி ஏற்கெனவே இரு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.
2019-ல் தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யச் சென்ற ஸ்டாலின், “இந்தத் தொகுதியில் என் தங்கை கனிமொழி போட்டியிடுகிறார். இங்கே தலைவர் கருணாநிதியே போட்டியிடுகிறார் என்றுதான் பொருள்” என்றார். அந்தத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றிபெற்றார் கனிமொழி. தற்போது இரண்டாவது முறையாக களம் காண்கிறார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி இதுவரை சந்தித்த 3 தேர்தல்களில் திமுக 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வென்றுள்ளன. இந்த மக்களவை தொகுதியில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த 6 சட்டப்பேரவை தொகுதிகளில், 4-ல் திமுக, ஒன்றில் காங்கிரஸ் என 5 தொகுதிகள் திமுக கூட்டணி வசமே இருக்கின்றன. கோவில்பட்டி மட்டும் அதிமுக வசம் இருக்கிறது.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், நாடார்கள், ஆதிதிராவிடர், தேவர் சமூகத்தினர், நாயக்கர், பிள்ளைமார், பர்னாண்டோ, யாதவர், ரெட்டியார் அருந்ததியர், ஆசாரி, வெள்ளாளர் ஆகிய சமூகத்தைச் சார்ந்த மக்கள் இங்கு கூடி வாழ்கின்றனர்.
அதிமுகவில் ஆர்.சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணி தமாகாவில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், நாம் தமிழர் கட்சியில் ரொவினா ரூத் ஜேன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக சார்பில் களம் காணும் சிவசாமி வேலுமணியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் என்றாலும், அவர் குடியிருப்பது சென்னையில் என்பதால் தொகுதிக்கு பரிச்சயம் இல்லாதவர் என கூறப்படுகிறது. இருப்பினும் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவுக்கு என்று இருக்கும் பலமான ஓட்டு வங்கி மற்றும் திமுக அரசு மீதான அதிருப்தி ஆகியவை தங்களுக்கு வலு சேர்க்கும் என அதிமுகவினர் கூறுகின்றனர்.
பாஜக அணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விஜயசீலன் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக-பாஜக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 42,004 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மற்றும் மத்தியில் நிலையான ஆட்சியை விரும்பும் மக்களின் வாக்குகள் தங்களுக்கு வரும் என பாஜகவினர் நம்புகின்றனர்.
இதேபோல் நாம் தமிழர் கட்சிக்கு என வழக்கமாக இருக்கும் வாக்கு பலம் இம்முறையும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு அக்கட்சி வேட்பாளரான பல் மருத்துவர் ரொவினா ரூத் ஜேன் தேர்தல் பணிகளை தொடங்கியிருக்கிறார்.
2019 தேர்தலில் வெற்றிபெற்று எம்பி-யான பிறகு, தூத்துக்குடியிலேயே வீடு எடுத்துத் தங்கிவரும் கனிமொழி, குறிஞ்சி நகரில் செயல்பட்டு வரும் எம்பி அலுவலகத்துக்கு வாரம்தோறும் வந்துவிடுவார். அங்கு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெறுவதற்காக பணியாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பெறப்பட்ட மனுக்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்குக் குறிப்பிட்ட நாள்களுக்குள் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மனுக்களின் கோரிக்கையைப் பொறுத்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்குப் பரிந்துரை செய்கிறார். எம்பி-யை நேரில் சந்திக்க விரும்பும் மனுதாரர்கள், அவர் அலுவலகம் வரும் நாள்களில் நேரில் அழைத்து சந்திக்கிறார்.
கடந்த தேர்தலின் போது தான் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது, 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இஎஸ்ஐ மருத்துவமனை பணிகள் தொடக்ம், இந்தியாவிலேயே முதன்முதலாக ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ‘சர்வதேச ஃபர்னிச்சர் பூங்கா’ அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.4,500 கோடிக்கு முதலீடுகளை ஈர்க்கவும், 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
குலசேகரப்பட்டினத்தில், நம் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைவதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டார். தூத்துக்குடி விமான நிலையத்தில், இரவு நேரங்களில் விமானங்களை இயக்க அனுமதி பெற்றுத்தந்துள்ளார். சில கட்டுமான வேலைகள் முடிந்தவுடன், இரவு நேர விமான சேவை தொடங்க உள்ளது. இதேபோல பல்வேறு திட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.
திமுக கடந்த முறை இருந்த கூட்டணி பலத்தை விட மநீம போன்ற இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வலுவாக உள்ளது. 2-வது முறையாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு போட்டியிடும் கனிமொழிக்காக, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணனும், கீதாஜீவனும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி எம்பி-யை எதிர்த்து, தற்போது தேர்தல் களத்தில் உள்ள யாராலும் வெற்றிபெற முடியாது. அவரின் வெற்றி உறுதியாகிவிட்டது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.