திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மக்களுடன் முதல்வர் என்ற நலத் திட்ட சிறப்பு முகாம் கார்மேல்புரம் உகார்த்தே நகர் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமை வகித்தார். முகாமில் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கொடைக்கானல் நகராட்சிக்குட்படட வார்டுகளான 22,23 மற்றும் 24−வது வார்டு பொது மக்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம், பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, பல்வேறு வகையான சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பம், மாற்றுத் திறனாளிக்கான பல்வேறு உதவிகள், வீட்டுவரி, குடிநீர்வரி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
பொதுமக்கள் கொடுக்கப்படும் கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் தொலைபேசி நிறுவனங்களான bsnl மற்றும் தனியார் தொலைபேசி இணைப்புகளின் இண்டர்நெட் இணைப்பு சரியாக இயங்காததால் மனுவை கொடுத்த மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். இது குறித்து கொடைக்கானல் வட்டாட்சியரிடம் கேட்டால் சிறப்பு முகாம் நடத்த வேண்டுமென அரசு உத்தரவின் பேரில் நடத்துகிறோம் ஆனால் இணையதள இணைப்பு இயங்காததற்கு நாங்கள் பொறுப்பல்ல இந்தப் பிரச்சனை தமிழ்நாடு முழுவதும் உள்ளது என அலட்சியமாக பதில் தெரிவித்தார். மேலும் முகாமில் கலந்து கொண்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் விளக்கம் கேட்டால், செல்போனில் பேசியபடியே மனுவை கொடுத்திட்டு போ அதன் பிறகு அலுவலகத்திற்கு வந்து பார்க்கவும் என அசால்ட்டாக பதில் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் முகாமில் 200−க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆனால் அதிகாரிகள் சரியாக பதில் சொல்லாததால் மக்கள் பலர் மனுவை கூட வழங்காமல் சென்றனர். மொத்தத்தில் மக்களுடன் முதல்வர் என்ற நலத்திட்ட சிறப்பு முகாமில் பயன் பெறுபவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்றும் யார், யார் பயன் பெறுகிறார்கள் என ஒரு மாதத்திற்கு பிறகு தான் தெரியும்.
தமிழக அரசு கடைநிலை எளிய மக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், பயன்பெற வேண்டும் எனவும் இதுபோன்ற பல முகாம்களை செயல்படுத்துகிறது. அரசு அலுவலகங்களுக்கும், அதிகாரிகளிடமும் அலைந்து திரிந்து நடக்காத அரசு சார்ந்த வேலைகளை இந்த முகாமிலாவது நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால் இங்கேயும் அதே யோக்கியதைதான் என்கின்றனர் பொதுமக்கள்.