நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி அபயாரண்யம் தற்காலிக யானைகள் முகாமில் மசினி என்ற யானை தாக்கி அதன் பாகன் பாலன் என்பவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, புலிகள் காப்பக இயக்குனர் டி.வெங்கடேஷ் அறிவுறுத்தலின் படி துணை இயக்குனர் சி.வித்யா உயிரிழந்த பாலன் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
உயிரழந்த பாகன் பாலனின் ஊதிய கணக்கு ஆக்சிஸ் வங்கியில் இருந்து வந்தது. அவரது வங்கி கணக்கில் விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் பாலன் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் (காப்பீடு) தொகையான முப்பது இலட்சம் ரூபாயை முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் சி.வித்யா முன்னிலையில், ஆக்சிஸ் வங்கி நிறுவன அலுவலர்கள் பாகன் பாலன் குடும்பத்தினருக்கு வழங்கினார்கள். தெப்பக்காடு வனச்சரக அலுவலர் மனோஜ் குமார், முதுமலை வனச்சரக அலுவலர் மேகலா மற்றும் வங்கி கிளை மேலாளர்கள் உடன் இருந்தனர்.