திருநெல்வேலி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலப்பரப்பையும் கொண்டுள்ளது. அதோடு, தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு மூலம் மாவட்டத்தின் சில பகுதிகள் ஆண்டுதோறும் செழிப்பைச் சந்தித்தாலும் நதிநீர் பங்கீடு சரிவிகிதமாக இல்லாததால் களக்காடு, கங்கணாங்குளம், திசையன்விளை, ராதாபுரம் போன்ற பகுதிகள் கடும் வறட்சியாகவே உள்ளன.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பா சமுத்திரம், பாளையம்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் ஆலங்குளம் மட்டும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தது. மீதமுள்ளவை அனைத்தும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவை. இதில் பாளையங்கோட்டை, ராதாபுரத்தில் திமுகவும், அம்பாசமுத்திரம், ஆலங்குளத்தில் அதிமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும், நெல்லையில் பாஜகவும் எம்எல்ஏ- க்களைப் பெற்றுள்ளன.

இத் தொகுதியில் கிராமப்புறப் பகுதிகளே அதிகம். முக்குலத்தோர், யாதவர், இந்து நாடார், கிறிஸ்துவ நாடார், பட்டியலினத்தவர், வேளாளர், இஸ்லாமியர்கள் எனப் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து வாழும் இந்தத் தொகுதியில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள்.

திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சியில் ராபர்ட் ப்ரூஸ், அதிமுகவில் ஜான்சி ரணி, பாஜகவில் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியில் சத்யாவும் திருநெல்வேலி மக்களவையில் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான இவர் திருநெல்வேலி, கன்னியாகுமரியில், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கட்சிப் பதவிகளில் இருந்துள்ளார். 2015-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்தவர்.

அதிமுகவில் திருநெல்வேலி மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளராக முதலில் சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டார்.இவர் திமுகவில் இருந்து விலகி சில தினங்களுக்கு முன்பு தான் அதிமுகவில் இணைந்தவருக்கு எப்படி சீட் கொடுக்கலாம் என அதிமுக நிர்வாகிகளிடம் எதிர்ப்பும் கிளம்பியதால், ஜான்சி ராணியை புதிய வேட்பாளராக அறிவித்தது. ஜான்சிராணி தற்போது நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சித் தலைவராகவும் அதிமுகவில் புறநகர் மாவட்ட இணை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார் ஏற்கனவே கூட்டுறவு வங்கி இயக்குனர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு முதலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து, பின்னர் சற்று நேரத்திலேயே, திருநெல்வேலி தொகுதியில்தான் போட்டியிடுகிறார் என்று உறுதி செய்தது பாஜக. இவர் அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்தவர். பின்னர் பாஜக கட்சியில் சேர்ந்தார். தற்போது திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, பல மாதங்களுக்கு முன்பே தொகுதிக்குள் வேலைகளைத் தொடங்கிவிட்டார். தேர்தல் அலுவலகம் திறந்து, திரை மறைவில் பிரசாரமும் செய்து வந்தார். மக்கள் மத்தியில் நல்ல அறிமுகமும் உள்ளதால் எப்படியும் நெல்லையை பொசிசன் எடுக்க வேண்டும் என களப்பணியாற்றி வருகிறார். சரத்குமார் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவதற்கான ஒத்திகையாக மாநாடு ஒன்றையும் நடத்திச் சென்றுள்ளார். சரத் கூட்டணியில் உள்ளதையும் பலமாக பார்க்கிறார். வென்றால் மத்தியில் இல்லையேல் மாநிலத்தில் என்கிறாராம் நயினார்.

கடந்த மக்களவை தேர்தல்களில் அதிமுக 2014-ல் வெற்றிபெற்றது. 2019-ல் இரண்டம் இடம் பிடித்தது. ஆனால் 2009-ல் தனித்து போட்டியிட்ட பாஜக வெறும் 39 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் பாஜகவின் வாக்குவங்கியை. பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறியுள்ளது. சிறுபான்மையினர்களின் வாக்குகள் நிச்சம் கிடைக்கும். சிட்டிங் எம்பியின் மீது நிறைய அதிருப்தி உள்ளது. எனவே கொஞ்சம் காங்கிரஸ் வேட்பாளருக்கு டஃப் கொடுத்தால் போதும் எப்படியும் வென்றுவிடலாம் என்கின்றனர் இலைத்தரப்பினர்.வேட்பாளர் ஜான்சிராணியும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி வருகிறார். 

கடந்த 2019 தேர்தலில் 50 சதவிகித வாக்குகள் பெற்று திமுகவை சேர்ந்த சிட்டிங் எம்பியான ஞானதிரவியம் வெற்றிபெற்றார். அதிமுக-பாஜக கூட்டணி 32 சதவிகித வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. தற்போது திமுகவிற்கு வலுவான கூட்டணி உள்ளது. மகளிர் திட்டங்களை அளித்துள்ளதால் திமுகவிற்கு இமேஜ் கூடியுள்ளது. திமுக-காங் வலுவான கூட்டணியோடு போட்டியிடுகிறது. அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளும் தனித்தனியாக களம் காண்கின்றனர். சிறுபான்மையினர்களின் வாக்குவங்கிதான் வெற்றி தோல்லியை தீர்மானிக்கிறது. அதிமுக, பாஜக தனித்தனியாக களம் காண்பது திமுகவிற்குத்தான் பலம். இருப்பினும் காங்கிரஸ் உட்கட்சி பூசலால் வேட்டி சட்டையை கிழித்துக்கொள்கிறது. இதைப் பார்த்து திமுக மண்டையை பிய்த்துக் கொள்கிறது. சந்தடி சாக்கில் நயினார் முன்னேறுவதைப்போல இருந்தாலும் கடும் இழுபரி தான் என்கிறார்கள்.

தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.